Skip to main content

கடத்தலுக்குப் பயன்பட்டதாயென விசாரிக்கும் முன்னரே... படகை மீட்டு இலங்கை அதிகாரிகள்....!

Published on 04/01/2019 | Edited on 04/01/2019

 

ss

 

இராமேஸ்வரம் அடுத்துள்ள சேரன் கோட்டை அருகேயுள்ள கடற்கரைப் பகுதியில் கடந்த புதன்கிழமை அன்று இலங்கையைச் சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்று நள்ளிரவில் கரை ஒதுங்கியது. இலங்கை படகு கரை ஒதுங்கியதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் படகை கைப்பற்றி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என விசாரணை மேற்கொண்ட நிலையில், இலங்கையிலிருந்து வந்த அதிகாரிகள் விசாரணைக்கு ஒத்துழைக்காமால் படகினை மீட்டு இலங்கைக்குக் கொண்டு சென்றனர்.

 

உள்ளூர் மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இராமேஸ்வரம் சேரன் கோட்டை கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ள படகை கைப்பற்றி, அதிலிருந்த மீன்பிடி வலை, இரண்டு மண்ணெண்ணெய் கேன் மற்றும் சுசூகி இஞ்சினை இனம் கண்டு, குறிப்பிட்ட படகு இலங்கையின் மன்னார் மாவட்ட பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் சந்தேகித்தனர்.

 

மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இலங்கைக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதும், இலங்கையில் இருந்து தங்கக்கட்டிகள் தமிழகத்திற்கு கடல்வழியாக கொண்டு வருவதும் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில், தற்போது சேரன் கோட்டை பகுதியில் படகு நிறுத்தி வைத்திருப்பதால் கடத்தலில் ஈடுபட வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்.

 

இந்நிலையில், வியாழனன்று இலங்கையிலிருந்து வந்த சுங்கத்துறை அதிகாரிகள், "இலங்கை மன்னார் மாவட்டம் வங்காலை பகுதியிலிருந்து நேற்று இரண்டு மீனவர்களுடன் மீன் பிடிக்க வந்த படகு இது" எனக் கூறி சப்தமில்லாமல் படகினை மீட்டு சென்றுள்ளனர். மத்திய மாநில உளவுப் பிரிவு அதிகாரிகள் செய்வதறியாது திகைக்க, "இலங்கை மீனவர்களுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா" என போர்க்கொடி தூக்கியுள்ளனர் ராமேஸ்வரம் மீனவர்கள்.

 

 


 

சார்ந்த செய்திகள்