யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்றதில் இருந்தே உத்தரப்பிரதேசத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. கொலைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் ஓரிரு நாட்களுக்கு முன் உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முன்னாள் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏவாக இருந்த ராஜுபால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அட்டிக் அகமது மற்றும் அஷ்ரஃப் மருத்துவ பரிசோதனைக்காக காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட போது இருவரும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது செய்தியாளர்கள் போல் நின்றிருந்த இருவர் அட்டிக் மற்றும் அஷ்ரஃப் இருவரையும் துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி, “அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகிய இருவரும் போலீஸ் காவலில் இருக்கும்போதே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இது ராஜுபால் கொலை வழக்கை போன்று மிகக் கொடூரமான குற்றமாகும். இது போன்ற குற்றங்கள் மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கி வருகிறது. அதனால் உச்சநீதிமன்றமே தாமாக முன்வந்து உரிய நடவடிக்கை எடுத்தால் நல்லது. உத்தரப்பிரதேசத்தில் தற்போது சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக தெரியவில்லை. உத்தரப்பிரதேசம் தற்போது என்கவுண்டர் பிரதேசமாக மாறி வருகிறது. இது சிந்திக்க வேண்டிய ஒன்று” என்று தனது ட்விட்டர் பகக்த்தில் தெரிவித்துள்ளார்.