Skip to main content

ராஷ்மிகா டீப் ஃபேக் வீடியோ விவகாரம்; மூன்று ஆண்டுகள் சிறை - மத்திய அரசு எச்சரிக்கை

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

Rashmika Deepfake Video Affair; Three years in jail-Central government warning

 

'கீதா கோவிந்தம்' திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரை உலகில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 'புஷ்பா' உள்ளிட்ட படங்களில் நடித்ததோடு தமிழில் 'சுல்தான்' என்ற படத்திலும் நடித்துள்ளார். நடிகர் விஜய்யுடன் 'வாரிசு' படத்தில் இணைந்து நடித்துள்ளார்.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் அவருடைய முகத்துடன் ஆபாசமாக உடை அணிந்த பெண் ஒருவர் லிப்ட் ஒன்றுக்குள் நுழைவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த வீடியோவில் இருப்பது நடிகை ராஷ்மிகா மந்தனா எனப் பலரும் கருதி கருத்துக்களைத் தெரிவித்தனர். ஆனால் அது எஐ டீப் பேக் (AI DEEP FAKE) எனும் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என்று தெரியவந்துள்ளது.

 

அந்த வீடியோ காட்சியில் உள்ள உண்மையான பெண்ணின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா மந்தனா இல்லை என்பதும் பிரிட்டிஷ் இந்திய பெண் ஒருவரின் வீடியோவை எஐ டீப் ஃபேக் தொழில் நுட்பத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா போன்று சித்தரித்து பரப்பப்பட்டது தெரியவந்துள்ளது. அமிதாப்பச்சன் உள்ளிட்ட நடிகர்கள் இது குறித்து தங்களுடைய எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

 

Rashmika Deepfake Video Affair; Three years in jail-Central government warning

 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை ரஷ்மிகா மந்தனா, தனது எக்ஸ் பதிவில், 'தன்னை வைத்து இணையத்தில் பகிரப்பட்டு வரும் எஐ டீப் ஃபேக் (AI DEEP FAKE) வீடியோ மிகுந்த மன வலியை தருகிறது. தொழில்நுட்பத்தை இவ்வளவு தவறாக பயன்படுத்தியது பயத்தை ஏற்படுத்துகிறது. தனக்கு ஊன்றுகோலாகவும் பாதுகாப்பு கவசமாகவும் இருக்கும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றி கூற இந்த நேரத்தில் கடமைப்பட்டுள்ளேன். இந்த சம்பவம் நான் பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும்போது நடந்திருந்தால் அதன் விளைவுகளை நான் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. இதுபோன்ற அடையாளத் திருட்டால் பலரும் பாதிக்கப்படுவதற்கு முன் இதை ஒன்றிணைந்து தடுத்து நிறுத்த வேண்டும்' என வேண்டுகோள் வைத்துள்ளார்.

 

Rashmika Deepfake Video Affair; Three years in jail-Central government warning

 

இதற்கு ஏற்கனவே மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், போலியாக வீடியோ சித்தரித்து வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். போலி வீடியோ தொடர்பாகச் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமல்லாது ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு கேட்டது... மத்திய அரசு கொடுத்தது - நிவாரண நிதி ஒதுக்கீடு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Central government relief fund allocation to tamilnadu

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு இதுவரை நிதி வழங்காமல் இருந்தது.

இதற்கிடையில், வெள்ள பாதிப்புகளுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.2 ஆயிரம் கோடி வழங்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 3ஆம் தேதி தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தமிழகம் சந்தித்து வரும் இயற்கை பேரிடர்கள் பற்றியும் அதன் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் குமணன் இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரண நிதியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Next Story

தேர்தலுக்குப் பிறகு ஷாக் கொடுக்க இருக்கும் சிம்கார்டு நிறுவனங்கள்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
SIM card companies to give a shock after the election

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்த கையோடு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியான தகவலின் அடிப்படையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டண உயர்வு 15 சதவீதத்திலிருந்து 17 சதவீதம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது.

ரூபாய் 208 ஆக உள்ள பார்த்தி ஏர்டெலின் ஒரு பயனருக்கான சராசரி வருவாய் 2027 இறுதியில் ரூபாய் 286 என உயரும் என கூறப்படுகிறது. கட்டணம் உயர்த்தப்படுவதன் மூலம் பார்த்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.