நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த விவாதத்தின் போது இந்த பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாகவும், பாஜக ஆட்சியமைக்கக் காரணமாக இருக்கும், சந்திரபாபு நாயுடுவையும், நிதிஷ்குமாரையும் திருப்திப்படுத்தவே, பட்ஜெட் தயாரிக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் டெல்லியில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழைநீர் கசிந்துள்ளது. இது தொடர்பான வீடீயோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வீடீயோவில், ஒழுகும் மழை நீரைச் சேகரிக்கு நாடாளுமன்ற அதிகாரிகள் பக்கெட் ஒன்றை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், ” நாடாளுமன்ற கட்டடத்திற்குள் ஒழுகும் மழை நீரை பிளாஸ்டிக் வாளி வைத்துப் பிடிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாடாளுமன்றக் கட்டிடத்தை முழுமையாக ஆய்வு செய்ய அனைத்துக் கட்சி எம்பிக்கள் அடங்கிய சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.