Skip to main content

“அரசியல் செய்யும் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும்” - ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

N

 

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ. 12 கோடி மதிப்புள்ள நிலத்தை போலி பத்திரம் தயாரித்து விற்பனை செய்ததாக மோசடியில் ஈடுபட்ட துணை பதிவாளர் உள்ளிட்ட 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் புதுச்சேரியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

 

இந்த வழக்கில் போலி பத்திரம் தயாரித்து விற்றவர்கள், வாங்கியவர்களை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த நிலத்தை பா.ஜ.கவை சேர்ந்த ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகிய இரண்டு எம்.எல்.ஏக்கள் குடும்பத்தில் உள்ளவர் வாங்கியுள்ளதாகவும், அவர்கள் மீதும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் எனவும், புதுச்சேரியில் அதிகரித்து வரும் நிலமோசடிகளைத் தடுக்கவும் வீடு, நிலங்களை போலி பத்திரம் கொண்டு பதிவு செய்வதை தடுக்கவும் தனி சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் சாரம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு வழுதாவூர் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜி.ராமகிருஷ்ணன், "பா.ஜ.க அல்லாத மாநில அரசுகளை சீர்குலைப்பதற்காக மத்திய அரசு நியமனம் செய்த எல்லா ஆளுநர்களும் எதிர்க்கட்சி போல் அரசியல் செய்து வருகிறார்கள். இது அரசியலமைப்பு சட்டத்தில் கிடையாது. ஆனால், ஆளுநர்கள் ஏன் அரசியல் செய்யக்கூடாது என்று எதிர் கேள்வி கேட்கும் அரசியல் கட்சியின் தலைவராக இருந்த தமிழிசையின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

தமிழக ஆளுநர் அரசு நிர்வாகத்தில் தலையிடக் கூடாது. மேலும், அன்றாடம் எதிர்க்கட்சித் தலைவர் போல அரசு திட்டங்களை விமர்சனம் செய்வது, அரசாங்கத்தை விமர்சனம் செய்வது, ஆளுநர் அரசியல்வாதி போன்று அரசு திட்டங்களுக்கு எதிராக பரப்புரை செய்வது போன்று தமிழக ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே, தமிழக ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவரும்  மத்திய அரசும் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது" என்று கூறினார்.

 

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் இல்லை. அரசு துரித நடவடிக்கை எடுக்கிறது. காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரியில் காமாட்சியம்மன் கோவிலின் 64 ஆயிரம் சதுர அடி கோவில் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்