
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், தேஜஸ்வி யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணியில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இந்தாண்டு இறுதியில், பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதற்கு, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கூட்டணி கட்சிகள் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், இன்று (07-04-25) அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் ‘புலம்பெயர்வதை நிறுத்துக, வேலை வாய்ப்பை வழங்குக’ என்ற தலைப்பின் பெயரில் பாதயாத்திரை நடத்தப்பட்டது. இந்த பாதயாத்திரையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்து கொண்டு கலந்து கொண்டார். ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேரணியில், காங்கிரஸ் கட்சியின் இந்திய மாணவர் சங்கத்தின் தேசிய பொறுப்பாளர் கன்ஹையா குமார், மாநில கட்சித் தலைவர் ராஜேஷ் குமார் உள்பட பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியில், ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்துகொண்டதன் புகைப்படங்களை பகிர்ந்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பீகார் இளைஞர்களிடையே ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உற்சாகம் உள்ளது. மேலும் அவர்களுக்கு வாய்ப்புகளையும் ஆதரவையும் வழங்காததற்காக அரசாங்கத்தின் மீது கோபம் உள்ளது. ‘புலம்பெயர்வதை நிறுத்துக, வேலை வாய்ப்பை வழங்குக’ ன்ற பேரணியின் போது ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உணர்வுகள், துன்பங்கள் மற்றும் உறுதிப்பாடு இன்று பெகுசராய் தெருக்களில் தெளிவாகத் தெரிந்தது.
வேலையின்மை மற்றும் இடம்பெயர்வுக்கு எதிரான இந்தக் குரல் இப்போது மாற்றத்திற்கான முழக்கமாக மாறியுள்ளது. பீகார் இப்போது அமைதியாக இருக்காது, இளைஞர்கள் இனி அநீதியைப் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர்கள் தங்கள் உரிமைகள், வேலைவாய்ப்பு மற்றும் நீதிக்காகப் போராடுவார்கள்’ எனக் குறிப்பிட்டார். பேரணி முடிந்த பிறகு, பீகார் தலைநகரான பாட்னாவில் நடக்கும் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார்.