Skip to main content

ஹத்ராஸ் விரையும் ராகுல் காந்தி எம்.பி.! 

Published on 04/07/2024 | Edited on 04/07/2024
Rahul Gandhi MP travel Hathras

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் (02.07.2024) ஆன்மிகக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆன்மிக சொற்பொழிவாளர் போலே பாபா உரையாற்றினார். இவரது பேச்சைக் கேட்க ஏராளமானோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதற்காகக் கூட்டம் கூட்டமாக வந்த மக்கள் நிகழ்ச்சி முடிந்த பின் திரும்பிச் செல்லும்போது வெளியே செல்ல வழியின்றி நெரிசலில் சிக்கினர். இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் மயங்கி விழுந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் என 121 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். அதோடு இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்டக்குழு விசாரணை செய்யவும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் பிரதமர் மோடி ஹத்ராஸில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் உறவினர்களுக்குப் பிரதமரின் பொது நிவாரண நிதியில் இருந்து 2 லட்சம் ரூபாயும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவிட்டிருந்தார். இந்தச் சம்பவத்திற்குக் காரணமான நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். இதற்காக ராகுல் காந்தி நாளை (05.07.2024) உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல உள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“சொந்த மாநிலத்தில் மோடியை தோற்கடிப்போம்” - ராகுல் காந்தி பேச்சு

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Rahul Gandhi speech they will defeat Modi in our own state

கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவை பேரவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக உரையாற்றினார். அப்போது, ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். 

குறிப்பாக அவர், “பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால், பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்.பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ராகுல் காந்தி பேசியதன் எதிரொலியாக குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தினர். அப்போது, பா.ஜ.க இடையே காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதனால், ஐந்து காங்கிரஸ் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று அகமதாபாத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஆறுதல் தெரிவித்து பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர், “நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து குஜராத்தில் அவர்களை தோற்கடிக்கப் போகிறோம். நரேந்திர மோடியையும் பா.ஜ.கவையும் அயோத்தியில் தோற்கடித்தது போல் குஜராத்தில் தோற்கடிப்போம். 

விமான நிலையம் கட்டப்பட்டபோது அயோத்தி விவசாயிகள் தங்கள் நிலத்தை இழந்தனர். ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அயோத்தியில் இருந்து யாரையும் அழைக்காததால் அயோத்தி மக்கள் கொந்தளித்தனர். அயோத்தியை மையமாக கொண்டு அத்வானி தொடங்கிய இயக்கம், அயோத்தியில் அந்த இயக்கத்தை இந்தியா கூட்டணி தோற்கடித்துள்ளது.

நமது அலுவலகத்தை அவர்கள் உடைத்த விதத்தில், நாம் அவர்களின் ஆட்சியை உடைக்கப் போகிறோம். ஆனால், குஜராத் காங்கிரசில் குறைபாடுகள் உள்ளன. கடந்த தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்த்து சரியாக போட்டியிடவில்லை. 2017ஆம் ஆண்டில் 3 மாதங்கள் கடுமையாக உழைத்து நல்ல பலன் கிடைத்தது. இப்போது நமக்கு 3 வருடங்கள் உள்ளன, இறுதிக்கட்டத்தை பின்தள்ளுவோம். 30 ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் ஆட்சி அமைக்கப் போகிறீர்கள். கட்சித் தலைமை, நான், என் சகோதரி உட்பட அனைவரும் உங்களுடன் நிற்கப் போகிறோம்” எனக் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசினார்.

Next Story

சிறுமி பாலியல் வன்கொடுமை; இளைஞருக்கு பரபரப்பு தீர்ப்பளித்த நீதிமன்றம்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
The court gave a sensational verdict to the youth on incident of girl child

உத்தரப் பிரதேசம் மாநிலம் பஹ்ரைசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டின் போது அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி, இந்தச் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியான அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அசோக் குமாருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், 55 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும், அபராதத் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால், கூடுதலாக 10 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று கூறி தீர்ப்பளிக்கப்பட்டது.