இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலையை சரிசெய்யும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற.
அந்த வகையில், பல வங்கிகளை இணைப்பது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகளை வெளியிட்டார். இந்நிலையில் ஆர்.பி.ஐ யின் கீழ் செயல்படும் பொதுத்துறை வங்கிகள் சில நிரந்தரமாக மூடப்பட வாய்ப்பிருப்பதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதனால் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கமளித்து நிதித்துறை செயலாளர் ராஜீவ்குமார் இந்த செய்திகளையெல்லாம் அடியோடு மறுத்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், "சில வங்கிகளை ஆர்பிஐ மூட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானவை. பொதுத்துறை வங்கிகள் மூடப்படும் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொதுத்துறை வங்கிகளை மேம்படுத்த பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மத்திய அரசு செய்துவருகிறது" என தெரிவித்தார். இதன்மூலம் பொதுத்துறை வங்கிகள் தொடர்பான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.