ரூ.8,400 கோடி மதிப்பில் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவரின் பயணத்திற்காக இரு விமானங்கள் வாங்கப்பட்டுள்ள நிலையில், இந்த விமான கொள்முதலுக்கான பணிகள் காங்கிரஸ் ஆட்சியிலேயே தொடங்கப்பட்டன என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. அமெரிக்க அதிபரின் தனி விமானத்தில் உள்ளது போன்ற சிறப்பான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த வாரம் இந்தியா வந்தடைந்தன.
அலுவலகப் பணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைபேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, வி.ஐ.பி.க்கள் தங்கும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் 8,400 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், டிராக்டரில் தான் சோஃபாவில் அமர்ந்ததாக விமர்சிப்பவர்கள் பிரதமரின் சொகுசு விமானத்தைக் கண்டுகொள்ளாதது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், இந்த இரு விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2011-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில்தான் கொள்முதல் குழு, அதிகாரமிக்க அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையில் அமைக்கப்பட்டது. அமைச்சரவைச் செயலாளர்கள் குழுவின் வழிகாட்டலின்படி, அமைச்சகங்கள் குழுக்கள் விமானக் கொள்முதல், மேலாண்மை, பயன்பாடு ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் இந்த விமானம், விமானப் படைக்கு மாற்றப்பட்டது. 2011 முதல் 2012-வரை இந்த விமானங்களைக் கொள்முதல் செய்வது தொடர்பாக அப்போதைய காங்கிரஸ் அரசில் 10 முறை ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது" என்கின்றன.