புதுச்சேரி மாநிலம், சேதாரப்பட்டிலுள்ள தொழிற்பேட்டையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் தங்களது பொருட்களை உற்பத்தி செய்து வருகின்றன.
அங்குள்ள தனியார் கேபிள் வயர் தயாரிக்கும் தொழிற்சாலை 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கேபிள் வயர்கள் ராக்கெட் ஏவுகணை தளம், நீர்மூழ்கி கப்பல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனம், எல்லையில் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும் உயர் ரக தளவாட பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த தொழிற்சாலையில் வட மாநில தொழிலாளர்கள், உள்ளூர் தொழிலாளர்கள் உள்பட 600-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டு ஷிப்டுகளாகப் பணிபுரிந்து வருகின்றன.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (02/10/2020) காந்தி ஜெயந்தி என்பதால், தொழிற்சாலைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இதனால் தொழிலாளர்கள் யாரும் பணிக்கு செல்லவில்லை. இந்நிலையில் நேற்று (03/10/2020) தொழிற்சாலையின் மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோனில் திடீரென கரும்புகை எழுந்தது. பின்பு, சிறிதுநேரத்தில் தீ படிப்படியாக கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதனால் அருகில் இருந்த மற்ற இரண்டு குடோன்களுக்கும் தீ மளமளவென பரவியது.
இந்த தீ விபத்து காரணமாக, அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இதுபற்றி தகவலறிந்ததும் தீயணைப்பு படை வீரர்கள் சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
ஆனால், அதற்குள் தொழிற்சாலையில் பயங்கர தீ கொழுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். இருப்பினும் தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்ததால் இடைவிடாமல் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சுமார் 6 மணி நேர முயற்சிக்கு பின் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
தீ விபத்தில் கேபிள் வயர் தொழிற்சாலையின் மூன்று குடோன்களில் வைக்கப்பட்டிருந்த 20 கோடி மதிப்பிலான மூலப்பொருட்கள், இயந்திரங்கள் எரிந்து சாம்பலானது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் (02/10/2020) இரவு பெய்த மழையால் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுயில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.