Skip to main content

2024 நாடாளுமன்ற தேர்தல்; பிரதமர் வேட்பாளர் யார்? - ஐக்கிய ஜனதா தளம் அறிவிப்பு!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

modi - nithish kumar

 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதிஷ்குமார் முதல்வராக இருந்து வருகிறார். இந்த சூழலில் அண்மையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சில நடவடிக்கைகளால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

மத்திய பாஜக அரசு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதில்லை என கொள்கை முடிவெடுத்துள்ளதாக அறிவித்த பிறகும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளமும் அதே கோரிக்கையை வலியறுத்தி வருகிறது. இதுதொடர்பாக அண்மையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் பீகார் மாநில கட்சிகள் பிரதமரை சந்தித்தன. அதேபோல் பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை நடத்தவும், அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும் மத்திய அரசு மறுத்து வந்த நிலையில், நிதிஷ்குமார், பெகாசஸ் குறித்து கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றதோடு நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவேண்டும் எனவும் தெரிவித்தார். கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவரே இவ்வாறு கூறியது, பாஜகவிற்கு நெருக்கடியாக கருதப்பட்டது.

 

இந்தநிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ”நிதிஷ்குமாருக்கு பிரதமராவதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் இருக்கிறது” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேசிய கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு பேசிய ஐக்கிய ஜனதா தளத்தின் முதன்மை பொது செயலாளரும் தேசிய செய்தி தொடர்பாளருமான கே சி தியாகி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

இதனால் கூட்டணிக்குள் சர்ச்சை எழுந்தது. இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த கே சி தியாகி, 2024 பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிதான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்துள்ளார். அதேநேரத்தில் ஒருங்கிணைப்பு குழு வேண்டும் என்ற கோரிக்கையை கே சி தியாகி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "தேசிய ஜனநாயக கூட்டணி சீராக செயல்படுவதை உறுதி செய்ய, தேசிய அளவில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்" என கூறியுள்ளார். மேலும் உத்தரபிரதேச தேர்தலில் கூட்டணி அமையாவிட்டால் தனித்து போட்டியிடுவோம் எனவும் கே சி தியாகி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருவது கவனிக்கத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மக்களவைத் தேர்தல்; 2ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Lok Sabha elections 2nd Phase voting has started

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதாவது கர்நாடகா, ராஜஸ்தான், அசாம், பீகார், கேரளா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

அதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள உள்ள 42 தொகுதிகளில் 3 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார் மாநிலங்களில் தலா 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரளாவில் உள்ள 20 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. அதே போன்று மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளுக்கும், மத்திய பிரதேசத்தில் 6 தொகுதிகளுக்கும், ஜம்மு - காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் என வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.