Skip to main content

மது, சொகுசு கார், பலி; சிறுவனுக்கு எதிராக வெகுண்டெழுந்த மக்கள்!

Published on 23/05/2024 | Edited on 23/05/2024
The public fighting against the boy for IT employees incident in luxury car collision in pune

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள கல்யாணி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஷால் அகர்வால். ரியல் எஸ்டேட் தொழிலதிபரான இவருக்கு வேந்தாந்த் அகர்வால் என்ற 17 வயது மகன் உள்ளார். இவர் கடந்த 19ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் தனது நண்பர்களுடன் தனது தந்தையின் சொகசு வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். 

அப்போது கல்யாணி நகர் ஜங்சன் பகுதியில் வேந்தாந்த் அகர்வால் அதிவேகமாக ஓட்டி வந்த கார், முன்னே சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில், பைக்கில் பயணித்த ஐ.டி ஊழியர்களான அனுஷ் மற்றும் கோஷ்டா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு மற்றொரு காரில் விழுந்தனர். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஐ.டி. ஊழியர்களான 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள், விபத்தை ஏற்படுத்திய சிறுவன் வேந்தாந்த் அகர்வாலை பிடித்து வைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வேந்தாந்த் அகர்வாலை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், வேந்தாந்த் அகர்வால் மற்றும் அவரது நண்பர்கள் பிரபல ஹோட்டலுக்கு சென்று மது அருந்தியுள்ளனர் என்றும் மதுபோதையில் இருந்த அவர்கள் அதிவேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளனர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையே, உயிரிழந்த ஐ.டி ஊழியர்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட வேந்தாந்த் அகர்வாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பீட்சா, பிரியாணி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, 20ஆம் தேதி சிறார் தொடர்பான குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு  நீதிமன்றத்தில் வேதாந்த் அகர்வால் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது. விபத்தை ஏற்படுத்தி ஐ.டி ஊழியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு, சிறுவனுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது கடும் விமர்சனங்கள் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த சிறுவனின் தந்தையான விஷால் அகர்வாலை நேற்று முன்தினம் (21-05-24) போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், விஷால் அகர்வாலுக்கு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை விசாரித்த நீதிமன்றம், விஷால் அகர்வாலை நாளை (24-05-24) வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. இதற்கிடையே, சிறுவன் வேந்தாந்த் அகர்வாலுக்கு மது வழங்கியதற்காக ஹோட்டல் உரிமையாளர் மற்றும் மேலாளர்கள் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்