Skip to main content

“பிரதமரின் கால்களில் விழுந்து அவமானத்தை ஏற்படுத்திவிட்டார்” - நிதிஷ்குமாரைச் சாடிய பிரஷாந்த் கிஷோர்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Prashant Kishore slams Nitish Kumar

பீகார் மாநிலம், பாகல்பூர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தேர்தல் வியூக கணிப்பாளரான பிரஷாந்த் கிஷோர் பங்கேற்றார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, “கடந்த காலத்தில் நிதிஷ்குமாருடன் பணியாற்றிய நான் இப்போது ஏன் அவரை விமர்சிக்கிறேன் என்று மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். அப்போது அவர் வித்தியாசமான மனிதர். அவருடைய மனசாட்சியை விற்பனைக்கு வைக்கவில்லை.

ஒரு மாநிலத்தின் தலைவர் என்பது அதன் மக்களின் பெருமை. ஆனால், பிரதமர் மோடியின் பாதங்களில் விழுந்து பீகாருக்கு நிதீஷ் குமார் அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவதில் நிதிஷ் குமார் முக்கிய பங்கு வகிப்பதாக பலரும் பேசுகிறார்கள்.

ஆனால் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறார்? அவர் தனது செல்வாக்கை மாநிலத்திற்கான நன்மைகளை உறுதிப்படுத்த பயன்படுத்தவில்லை. 2025 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும், பா.ஜ.க ஆதரவுடன் தான் ஆட்சியில் நீடிப்பதை உறுதிசெய்ய அவர் பிரதமர் மோடியின் கால்களைத் தொடுகிறார்” என்று விமர்சனம் செய்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“எதிர்க்கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை” - நிதிஷ்குமார் விமர்சனம்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Nitish Kumar crictized Opposition parties have never worked for the country

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாஜக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம் பழைய நாடாளுமன்றத்தின் வளாகத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக மோடியை தேர்வு செய்ய ஆதரித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார் பேசினார். அப்போது அவர், “பீகாரில் நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்படும். நாங்கள் அனைவரும் ஒன்றிணைவது மிகவும் நல்ல விஷயம், நாங்கள் அனைவரும் பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவோம். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரதமராகப் பதவியேற்க உள்ளீர்கள். ஆனால் இன்றே நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்று நான் விரும்பினேன். நீங்கள் உறுதிமொழி எடுக்கும் போதெல்லாம் நாங்கள் உங்களுடன் இருப்போம். உங்கள் தலைமையில் நாங்கள் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

எதிர்க்கட்சிகள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்குச் சேவை செய்ததில்லை. பிரதமர் மோடி தலைமையில் நாடு முன்னேறும். அடுத்த முறை மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த முறை அவர்கள் பெற்ற எந்த இடத்திலும் அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று நான் உணர்கிறேன்” என்று கூறினார். 

Next Story

பா.ஜ.க.வின் முக்கிய திட்டங்கள்; செக் வைக்கும் ஐக்கிய ஜனதா தளம்

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
The United Janata Dal held a check Major projects of BJP

உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதனையடுத்து, தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. அதில், 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைக்கவுள்ளது. 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதான கட்சிகளாக இருப்பது, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும் தான். இந்த இரு கட்சிகளைத் தங்கள் பக்கம் இழுக்க இந்தியா கூட்டணி முயற்சித்து வந்த நிலையில், இருகட்சிகளும் பல்வேறு நிபந்தனைகளை விதித்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், பா.ஜ.கவின் சில முக்கிய திட்டங்கள் மீதான அதிருப்தியை ஜக்கிய ஜனதா தளம் நேற்று வெளியிட்டது. 

இது தொடர்பாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.சி.தியாகி செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “நாட்டிலுள்ள எந்தக் கட்சியும் ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை வேண்டாம் என்று கூறவில்லை. பீகார் பாதையைக் காட்டியது. அனைத்துக் கட்சிக் குழுவில் பிரதமரும் அதை எதிர்க்கவில்லை. ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது காலத்தின் தேவை. நாங்கள் அதைத் தொடர்வோம். நாங்கள் நிபந்தனையற்ற ஆதரவை பாஜகவுக்கு வழங்கியுள்ளோம். ஆனால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும். பிரிவினைக்குப் பிறகு பீகார் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் வரை இந்தச் சமத்துவமின்மை தொடரும்.

அக்னிபாத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்தத் திட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது, அதன் விளைவு தேர்தலிலும் தெரிந்தது. அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​ஆயுதப்படைகளின் பெரும் பகுதியினரிடையே அதிருப்தி நிலவியது. அவர்களது குடும்பத்தினரும் தேர்தலின் போது எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, இது குறித்து விவாதிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்றும் பொது சிவில் குறித்த எங்களது நிலைப்பாடு அப்படியே உள்ளது. இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரிடம் கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பொது சிவில் சட்ட ஆணையத்தின் தலைவருக்கு நிதிஷ் குமார் கடிதம் எழுதி, நாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல என்றும், ஆனால் இது குறித்து விரிவான விவாதம் தேவை என்றும் கூறியிருந்தார். இது குறித்து, அனைத்து முதல்வர்களுடனும் கலந்து பேசி ஒருங்கிணைந்த முடிவு எடுக்க வேண்டும்” என்று கூறினார்.