Skip to main content

4 வயது குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூரத் தாய்; விசாரணையில் பகீர் தகவல்!

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
mother strangles 4-year-old in karnataka

கர்நாடகா மாநிலம், சிக்கலசந்திரா அருகே மஞ்சுநாத் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரம்யா (35) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 4 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் இருந்தனர். வெங்கடேஷ் தற்போது, நார்வே நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ரம்யா தனது வீட்டில் குழந்தைகளை கவனித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் (13-06-24) ரம்யா தனது உறவினரை செல்போன் மூலம் தொடர்புகொண்டு, ஒரு குழந்தையை கொலை செய்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார், ரம்யாவின் வீட்டிற்கு விரைந்து வந்த போது, அங்கு ஒரு குழந்தை உயிரற்று இருந்தது. உடனடியாக அந்த குழந்தையின் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரம்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். 

இதனை தொடர்ந்து, ரம்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ரம்யாவுக்கும் வெங்கடேஷுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தையான பிரதிகா வாய் பேச முடியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளது. அந்த குழந்தையை வளர்க்க ரம்யா மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். அந்த குழந்தைக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவித முன்னேற்றம் ஏற்படவில்லை. இதில் மன உளைச்சலான ரம்யா நேற்று முன்தினம் குழந்தை பிரதிகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ரம்யாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நடிகைக்காக ரசிகரைக் கொன்ற நடிகர்; சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம் - கதிகலங்கும் திரையுலகம்

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

கடந்த ஜூன் 9 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள காமாட்சி பாளையா என்ற பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் சித்துரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சாமி என்றும் அவர் மருந்தகத்தில் பணியாற்றி வந்தார் என்று தெரியவந்தது.   

இதனைத் தொடர்ந்து ரேணுகா சாமியிடம் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகாறாறு காரணமாக தாங்கள்தான் கொலை செய்தோம் என்று 4 பேர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் பிரபல கன்னட நடிகர் தர்ஷனுக்கு அவரது தோழியுமான நடிகையுமான பவித்ரா கௌடாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.   

நடிகர் தர்ஷனுக்கு ஏற்கெனவே விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணமாகி பிள்ளைகள் உள்ளனர். ஆனால் தர்ஷன் தன்னை மிரட்டி அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறி அவரை விட்டுப் பிரிந்துசென்றுள்ளார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதே சமயம் நடிகையும், மாடலுமான பவித்ரா கௌடாவுக்கு ஏற்கெனவே திருமணமாகி விவகாரத்து ஏற்பட்டு கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் தர்ஷனுக்கும், பவித்ரா கௌடாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் திருமணம் செய்து கொள்ளாமல் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவந்துள்ளனர். தர்ஷனின் ரசிகரான ரேணுகா சாமி தர்ஷனும் - விஜயலட்சுமியும் பிரிந்ததற்கு பவித்ராதான் காரணம் என்று பவித்ராவின் இன்ஸ்டாகிரமில் ஆபாசமாகப் பேசி குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். மேலும் பவித்ரா பிரிந்து சென்றால்தான் தர்ஷனும், விஜயலட்சுமியும் ஒன்றாக வாழ்வார்கள் எனக் கடுமையான வார்த்தைகளில் பேசி ஆபாசப் படங்களையும் குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறாராம். 

Shocking information in Darshan Pavithra Gowda Renuka Swamy case

இதனைப் பவித்ரா தர்ஷனிடம் சொல்ல, தனது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடத்தி வரச் சொல்லியிருக்கிறார். அதன்பேரில் அவரது ஆட்கள் தர்ஷனின் நெருங்கிய நண்பரான வினய் குமாரின் வீட்டிற்குக் கடத்தி வந்துள்ளனர். பின்னர் அங்கு வந்த தர்ஷனும், பவித்ராவும் தங்களது ஆட்களை வைத்து ரேணுகா சாமியைக் கடுமையாகத் தக்கியுள்ளனர். அதில் ரேணுகா சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தர்ஷன் - பவித்ரா இருவரின் உத்தரவின் பேரிலேயே இந்தக் கொலை அரங்கேறி இருப்பதாக போலீஸில் சரண் அடைந்தவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். 

இது தொடர்பாக போலீசார் ரேணுகா சாமி உடல் கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது வினய் குமாரின் காரில் இருந்து ரேணுகா சாமியின் உடல் வீசப்படுவது பதிவாகியுள்ளது. மேலும் ரேணுகா சாமி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு தர்ஷனும் பவித்ராவும் காரில் வந்துள்ளதையும், இருவரது செல்போன் சிக்னல் அதே இடத்தில் இருந்ததையும் உறுதி செய்த போலீசார் தர்ஷன், பவித்ரா உட்பட 10 பேரைக் கைது செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். மறுபுறம் தர்ஷனின் ரசிகர்கள் போலீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ரேணுகா சாமியின் பிரேதப்பரிசோதனை அறிக்கையில், தர்ஷன், பவித்ரா மற்றும் அவரது ஆட்கள் ரேணுகாசாமி மீது மின்சாரத்தை செலுத்தி கொடூரமாகக் கொன்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் நடிகை ரம்யா, நடிகர் கிச்சா சுதிப் உள்ளிட்ட திரை பிரபலங்கள் ரேணுகா சாமிக்கு நீதிவேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

Next Story

50 மீட்டர் தரதரவென இழுத்துச் சென்ற எருமை; பொதுமக்களே மீண்டும் உஷார்!

Published on 17/06/2024 | Edited on 17/06/2024
50 meter standard drawn buffalo; Public beware again

சென்னை திருவொற்றியூரில் சாலையில் நடந்த சென்ற பெண்ணை எருமை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி இழுத்துச் செல்லும் வீடியோ காட்சிகள் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே சென்னையில் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் திரியும் மாடுகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்பான செய்திகள் வெளியாகி இருந்தது. அது மட்டுமல்லாது முதியவர்கள் சிலர் மாடு தாக்கி உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் உள்ள கிராமத்து தெரு என்ற தெருவில் நடந்து சென்ற பெண் ஒருவரை எதிர்புறத்தில் நடந்து வந்து கொண்டிருந்த எருமை மாடு எதிர்பாராத விதத்தில் முட்டியது. மேலும் கொம்பில் சிக்கிக்கொண்ட அப்பெண்ணை தாறுமாறாக சுழற்றியதோடு. அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு அந்தப் பெண்ணை இழுத்துச் சென்றது. இந்தக் காட்சிகள் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. பெண்ணை மீட்க வந்தவர்களையும் அந்த எருமை மாடு முட்டியது. இதில் காயமடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கெனவே சென்னையில் வளர்ப்பு நாயால் ஒரு சிறுமி கடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் தற்போது எருமை மாடு முட்டி பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.