Skip to main content

“மோசடி நடக்கவில்லை எனில் ஏன் இந்த கைது நடவடிக்கைகள்?” - பிரதமர் மோடி மீது கார்கே குற்றச்சாட்டு

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Kharge allegation against Prime Minister Modi

இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நீட் தேர்வு குறித்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக, அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலமாகவும், தேசிய தேர்வு முகமை மூலமாகவும் நீட் தேர்வு ஊழலை மூடி மறைக்க ஆரம்பித்துள்ளது மோடி அரசு. நீட் தேர்வில் தாள் கசியவில்லை என்றால் பீகாரில் காகிதக் கசிவு காரணமாக 13 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது ஏன்? பாட்னா காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு கல்வி மாஃபியாவுக்கு ரூ.30, ரூ.50 லட்சம் செலுத்தியதை அம்பலப்படுத்தியது. 

குஜராத்தின் கோத்ராவில் நீட் தேர்வு மோசடி முறியடிக்கப்பட்டது. பயிற்சி மையம் நடத்தும் நபர், ஆசிரியர் மற்றும் மற்றொரு நபர் உட்பட 3 பேர் இதில் ஈடுபட்டுள்ளதாகவும், குஜராத் காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்டவர்களிடையே 12 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மோடி அரசின் கூற்றுப்படி, நீட் தேர்வில் எந்தத் தாள்களும் கசியவில்லை என்றால், ஏன் இந்தக் கைதுகள் செய்யப்பட்டன? இதிலிருந்து என்ன முடிவு எடுக்கப்படுகிறது?

மோடி அரசு நாட்டு மக்களை முட்டாளாக்க முயற்சி செய்கிறது. 24 லட்சம் இளைஞர்களின் கனவுகளை மோடி அரசு நசுக்கியுள்ளது. 24 லட்சம் இளைஞர்கள் நீட் தேர்வில் கலந்து கொண்டு மருத்துவர்களாக ஆவதற்காக, இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார்கள். மோடி அரசு தேசிய தேர்வு மையத்தை தவறாகப் பயன்படுத்தி, மதிப்பெண்கள் மற்றும் தரவரிசைகளை பெருமளவில் மோசடி செய்துள்ளது” என்று விமர்சனம் செய்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தேர்வுத்தாள் கசிவு மையமாக மாறிவிட்டன” - ராகுல் காந்தி விமர்சனம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
 Rahul Gandhi criticized BJP-ruled states have become exam paper leak center

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாக பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நீட் தேர்வில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நீட் தேர்வில் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் சீர்குலைந்த விவகாரத்தில் நரேந்திர மோடி வழக்கம்போல் மவுனம் சாதித்து வருகிறார்.

பீகார், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட கைதுகள் மூலம் தேர்வில் திட்டமிட்ட முறையில் ஊழல் நடந்திருப்பதையும், இந்த பாஜக ஆளும் மாநிலங்களில், தேர்வுத்தாள் கசிவின் மையமாக மாறியுள்ளதையும் தெளிவாகக் காட்டுகிறது. நமது நீதித்துறையில், வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றுவதன் மூலம் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு உத்தரவாதம் அளிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் பொறுப்பை நிறைவேற்றும் அதே வேளையில், இளைஞர்களின் குரலை வீதிகளில் இருந்து பாராளுமன்றம் வரை வலுவாக எழுப்பி, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து இதுபோன்ற கடுமையான கொள்கைகளை வகுக்க உறுதி அளித்துள்ளோம்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story

நீட் தேர்வு முறைகேடு; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Supreme Court action order to the central government to NEET examination malpractice

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் ( NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்தத் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதினர். அந்த வகையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. வரும் ஜூன்14 ஆம் தேதி இதற்கான முடிவுகள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

இத்தகைய சூழலில்தான் மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த 20 வயது மாணவர் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ராஜஸ்தானில் வினாத்தாள் கசிந்ததாக கூறப்பட்ட நிலையில் ஆள்மாறாட்டம் நடந்ததும் அம்பலமாகி இருந்தது. நீட் தேர்வு வினாத்தாள் ரூ.20 லட்சத்துக்கு விற்பனை ஆனதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.  இந்த முறைகேடு சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

ஜூன் 14ஆம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக அறிவித்திருந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்த பரபரப்பான நேரத்தில் சத்தமே இல்லாமல் நீட் தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டது. அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்ததாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. 

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன. பெற்றோர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்கள் எனப் பலரும் இந்த வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கிடையே நீட் தேர்வில் எந்தவித முறைகேடும் நடக்கவில்லை என மத்திய அரசு விளக்கமளித்து வருகிறது.

Supreme Court action order to the central government to NEET examination malpractice

இந்த நிலையில், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு இன்று (18-06-24) உச்சநீதிமன்றத்துக்கு வந்தது. அதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘நீட் தேர்வு விவகாரத்தில் யாராவது ஒருவர் அதாவது 0.001% அலட்சியமாக இருந்தாலும் அதை முழுமையாக ஆராய வேண்டும். தனிநபர் ஒட்டுமொத்த அமைப்புக்கும் ஆபத்தானவராக மாறும் சூழலை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற குழந்தைகள் கடினமாக படிக்கின்றனர் என்பதை யோசித்துப் பாருங்கள். மோசடி செய்த ஒருவர் மருத்துவராக மாறுவதை கற்பனை செய்து பாருங்கள்’ என கருத்து தெரிவித்து இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது, மேலும், வினாத்தாள் கசிவு, முறைகேடு வழக்கின் விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.