Skip to main content

மே 2- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்! 

Published on 27/04/2022 | Edited on 27/04/2022

 

Prime Minister Narendra Modi to tour abroad on May 2

 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, வரும் மே 2- ஆம் தேதி ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 

 

பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முதற்கட்டமாக, வரும் மே 2- ஆம் தேதி அன்று ஜெர்மனிக்கு செல்கிறார். அப்போது ஜெர்மன் பிரதமர் உலஃப் ஷோல்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்தோ- ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைத் திட்டத்தின் ஆறாவது அமர்வில் இரு தலைவர்களும் பேச உள்ளனர். 

 

இச்சந்திப்பில், இரு நாடுகளில் இருந்தும் சில அமைச்சர்களும் பங்கேற்கவுள்ளனர். வர்த்தகம் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் இரு தலைவர்களும் கலந்துக் கொண்டு பேச உள்ளனர். ஜெர்மனியைத் தொடர்ந்து, டென்மார்க் செல்லும் பிரதமர், அங்கு அந்நாட்டு பிரதமர் ஃப்ரெடரிக்செனைச் சந்தித்துப் பேசவுள்ளார். அதைத் தொடர்ந்து, கோபன்ஹேகனில் நடைபெறும் இந்தோ நார்டிக் நாடுகளின் கூட்டத்திலும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். 

 

பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரான்ஸுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மேக்ரானைச் சந்தித்துப் பேசவுள்ளார். 2022- ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். 

 

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த எட்டு ஆண்டுகளில் 113 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருப்பதும், இறுதியாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இத்தாலி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு சென்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.    

 

சார்ந்த செய்திகள்