Skip to main content

“சந்திரசேகர ராவ்வின் உண்மை முகம் இது தான்” - பிரதமர் மோடி தகவல்

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

PM Modi says This is the real face of Chandrasekhara Rao

 

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. அதனால், இந்த 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகக் காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சென்று ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சியினரும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், ராஜஸ்தான், மத்தியப் பிரதேச மாநிலம் என 5 மாநிலங்களிலும் தேர்தல் பிரச்சாரத்திற்காக பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், நேற்று (03-10-23) தெலுங்கானா, நிஜாமாபாத்தில் பா.ஜ.க சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, “ கடந்த முறை ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ்வுக்கு ஆதரவு தேவைப்பட்டது. அதன் பிறகு, அவர் டெல்லிக்கு வந்து என்னை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

இதனையடுத்து, அவர் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக கூறினார். மேலும், அவருக்கு ஆதரவு அளிக்கும்படியும், தனக்கு பிறகு தனது மகன் கே.டி.ராமாராவிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், மாநகராட்சி தேர்தலுக்கு முன் அவரது செயல்பாடுகளால் அவர் வைத்த அந்த கோரிக்கையை நிராகரித்தேன். மேலும், நான், இது மன்னர் ஆட்சி அல்ல. இது ஜனநாயக நாடு. முதல்வர் நாற்காலியில் யார் அமர வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்து கொள்ள வேண்டும், நீங்கள் அல்ல’ என்று கூறிவிட்டேன். 

 

அதன் பிறகு, என்னை நேருக்கு நேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். தெலுங்கானா மக்களிடம் சந்திரசேகர ராவ்வின் குடும்பம் பொய் சொல்லி ஏமாற்றி வருகிறது. இது தான் சந்திரசேகர ராவ்வின் உண்மையான முகம். தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெற வைப்பதற்காக மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை சந்திரசேகர ராவ் பயன்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு ஒரு முறை வாய்ப்பு அளித்தால், சந்திரசேகர ராவ்வின் ஆட்சியில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்தையும் மக்களிடம் திருப்பி கொடுப்போம்” என்று கூறினார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்