இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் பிப்ரவரி 10 ஆம் தேதி வரை நடைபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. அந்த வகையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து, மக்களவையில் கடந்த 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸையும், முன்னாள் பிரதமர் நேருவையும் கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்வினையாற்றினர். இதனையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி நேற்று (07-02-24) மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அதில், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
இந்த நிலையில், மாநிலங்களைவில் இன்று (08-02-24) பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்து பேசினார். அதில் பேசிய பிரதமர் மோடி, “மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெறும் உறுப்பினர்கள், இந்த நாட்டின் மிகப்பெரிய சொத்து. இப்போது, டாக்டர் மன்மோகன் சிங்கை நினைவு கூற விரும்புகிறேன். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆறு முறை இந்த அவையை அலங்கரித்துள்ளார். அவரது பங்களிப்பு மகத்தானது. இவ்வளவு காலமாக, இந்த நாடாளுமன்ற கட்டடத்தையும், நாட்டையும் மன்மோகன் சிங் வழிநடத்திய விதம் மூலம் அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்.
அனைத்து எம்.பி.க்களும் முன்னுதாரணமாக மன்மோகன் சிங் திகழ்கிறார். முக்கியமான மசோதாக்கள் மீதான வாக்கெடுப்புகளின் போது, உடல் குன்றியிருந்த போது கூட தனது சக்கர நாற்காலியில் வந்து அவர் வாக்களித்தது எனக்கு நினைவிருக்கிறது. ஒரு உறுப்பினர் தனது கடமைகளில் விழிப்புடன் இருப்பதற்கான எடுத்துக்காட்டு இது. ஓய்வு பெற இருக்கும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வணக்கம் செலுத்த விரும்புகிறேன்” என்று கூறினார்.