கேரளா ஒரு குட்டி பாகிஸ்தான் என்று மகாராஷ்டிரா அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க தலைவரும், மகாராஷ்டிரா துறைமுகம் மற்றும் மீன்வளத்துறை அமைச்சருமான நித்தேஷ் ரானே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “கேரளா ஒரு குட்டி பாகிஸ்தான். அதனால்தான் ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அனைத்து பயங்கரவாதிகளும் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இதுதான் உண்மை. பயங்கரவாதிகளை அழைத்துச் சென்று எம்.பி.யாகிவிட்டனர்” என்று சர்ச்சையாக பேசினார்.
மகாராஷ்டிரா அமைச்சரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளதாவது, “கேரளாவில் சி.பி.எம் பா.ஜ.கவின் இத்தகைய பிரச்சாரத்திற்கு களம் அமைந்துள்ளது. அமைச்சர் ரானேவின் கருத்தை ஏற்கிறார்களா என்பதை பிரதமர் நரேந்திர மோடியும், கேரளா முதல்வர் பினராயி விஜயனும் தெளிவுபடுத்த வேண்டும். வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான உணர்வுப்பூர்வமான கருத்துக்காக ரானேவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கூறினார்.
இந்த வருடத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரேபரேலி தொகுதியிலும், கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அந்த தேர்தலில், அந்த இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றார். இரண்டு தொகுதியிலும் வெற்றி பெறும் பட்சத்தில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி, அவர் ஏற்கெனவே வகித்து வந்த வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, நடைபெற்ற வயநாடு இடைத்தேர்தலில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.