மத்திய அரசு சார்பில், ஆண்டுதோறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ‘மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 4 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ், பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்ற மனுபாக்கருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று ஹாக்கி வீரர் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவின் குமாருக்கும் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள ஹர்மன் ப்ரீத் சிங் இந்திய ஹாக்கி அணியின் கேப்டனாக உள்ளார். ஜனவரி 17ஆம் தேதி (17.01.2025) டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இந்த விருதை வழங்க உள்ளார். அதோடு தமிழகத்தைச் சேர்ந்த பாரா பேட்மிண்டன் வீராங்கனைகள் துளசிமதி முருகேசன், நித்ய ஸ்ரீ, சுமதி சிவன் மற்றும் மனிஷா ராமதாஸூக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதையும் வரும் 17ஆம் தேதி குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டு விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த நம் சாதனை வீரர்களுக்கு மத்திய அரசின் விருதுகள் வழங்கப்பட்டிருப்பதில் மகிழ்ச்சி. கேல் ரத்னா விருது பெற்றுள்ள குகேஷ், அர்ஜுனா விருது பெற்றுள்ள துளசிமதி முருகேசன், நித்யா ஸ்ரீ சுமதி சிவன், மனிஷா ராமதாஸ் மற்றும் அபாய்சிங் (Abhay Singh) ஆகியோருக்கு என் வாழ்த்துகள். வெற்றிகள் தொடரட்டும். தமிழ்நாட்டில் இருந்து சாதனை படைப்போரின் எண்ணிக்கை வருங்காலங்களில் உயர்ந்துகொண்டே இருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.