இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனால் ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ளார்.
இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுக் கடிதத்துடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்தார். இதனையடுத்து ஆட்சியமைக்க பிரதமர் மோடிக்கு முறைப்படி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அழைப்பு விடுத்தார். முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சியின் தலைவராகப் பிரதமர் மோடி இன்று தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 9ஆம் தேதி பிரதமராக பதவியேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசுகையில், “குடியரசுத்தலைவர் இப்போதுதான் என்னை அழைத்து, பிரதமராகப் பதவியேற்க அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா குறித்தும் கேட்டறிந்தார். அதற்கு வரும் 9ஆம் தேதி மாலை நடக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் கூறியுள்ளேன். அதற்குள் நாங்கள் குடியரசுத்தலைவரிடம் அமைச்சர்கள் பட்டியலை ஒப்படைப்போம். அதன் பிறகு பதவியேற்பு விழா நடைபெறும்.
நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்குப் பிறகு இது முதல் தேர்தல். மூன்றாவது முறையாகத் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதன் மூலம் நாட்டுக்கு சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். கடந்த இரண்டு முறை நடந்த ஆட்சி காலத்தில் நாடு முன்னேறிய வேகத்தில், ஒவ்வொரு துறையிலும் மாற்றம் தெரியும். 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீள்வது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையான தருணம்.
கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா உலகிற்கு விஸ்வபந்துவாக உருவெடுத்துள்ளது. அதன் அதிகபட்ச நன்மை இப்போது தொடங்குகிறது. மேலும் அடுத்த 5 ஆண்டுகள் உலகச் சூழலில் இந்தியாவிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகம் பல நெருக்கடிகள், பல பதற்றங்கள், பேரழிவுகளை சந்தித்து வருகிறது. இவ்வளவு பெரிய நெருக்கடிகள் இருந்தபோதிலும், நாம் இன்று உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக அறியப்படுவது இந்தியர்களாகிய நாம் அதிர்ஷ்டசாலிகள். வளர்ச்சிக்காக உலகில் நாமும் போற்றப்படுகிறோம்” எனத் தெரிவித்தார்.