இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் முதன்மையான வங்கியாக "கனரா வங்கி" திகழ்கிறது. வங்கிக்கணக்கில் இருந்து அதிக முறை பணம் எடுத்தால் கட்டணம் வசூலித்த நிலையில், தற்போது பணத்தை டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் வசூலிக்கும் நிலை வந்துவிட்டது. கனரா வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஜூலை 1-ம் தேதி முதல் மாதத்திற்கு 3 முறை மட்டுமே வங்கி கணக்கில் 50,000 ரூபாய் வரையில் இலவசமாக பணமாக டெபாசிட் செய்ய முடியும். அதன் பிறகு டெபாசிட் செய்யும் ஒவ்வொரு 1000 ரூபாய்க்கும் 1 ரூபாய் சேவை கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் இந்த சேவை கட்டணமானது குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை இருக்கும் என்றும் கனரா வங்கி தெரிவித்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், நேரடி பணப்பரிவர்த்தனையை குறைக்கவும் இந்த நடவடிக்கையை வங்கி நிர்வாகம் எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் பணபரிவர்த்தனையை அதிகரிக்கும் நோக்கில், இத்தகைய கட்டண அறிவிப்பை கனரா வங்கி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே போல் மற்ற வங்கிகளும் இந்த முறையை நடைமுறைப்படுத்த அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நேரடி பணப்பரிவர்த்தனை குறைந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.