Skip to main content

“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் படித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” - ப.சிதம்பரம்

Published on 24/07/2024 | Edited on 24/07/2024
 P. Chidambaram says happy that the Finance Minister has read the Congress manifesto

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், 2024 -2025 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று(23.7.2024) தாக்கல் செய்தார். அதில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பட்ஜெட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய நான்கு பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு எந்த திட்டமும் அறிவிக்காததை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் வழக்கம் போல் இன்று கூடியது. இதில் மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பியும், முன்னாள் நிதியமைச்சருமான பா.சிதம்பரம் பேசினார். 

அப்போது அவர், “வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவித்த நிதியமைச்சருக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நிதியமைச்சர் படித்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் 30,31 பக்கங்களில் உள்ள சிறந்த யோசனைகளை நிதியமைச்சர் எடுத்து கையாண்டிருப்பது மகிழ்ச்சி. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை ஆளும்கட்சி உறுப்பினர்கள் வாசித்துப் பார்க்க வேண்டும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இருந்து மேலும் பல யோசனைகளை எடுத்துப் பயன்படுத்தினால் மிகவும் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். 

காப்பி அடிப்பது இந்த அவையில் தடை செய்யப்பட்ட விஷயம் அல்ல. காப்பி அடிப்பது இந்த அவையில் ஊக்குவிக்கப்படும், பாராட்டப்படும். நாட்டில் பெரும் சவாலாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம். இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் ஜூன் மாத நிலவரப்படி 9%ஆக உள்ளதாக ஆய்வறிக்கை கூறியுள்ளது. ஏற்கெனவே ஒன்றிய அரசு செயல்படுத்திய உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் பயன் கிடைக்கவில்லை எனத் தெரிகிறது. முந்தைய திட்டத்தில் பயன் கிடைக்காததால் தற்போது வேலைவாய்ப்புடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிவித்துள்ளனர். ஊக்குவிப்பு இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தால் கிடைத்த பயன் என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும். 

2.9 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் வேலை கிடைக்கும் என நம்பிக்கை இல்லை. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற வெற்று அறிவிப்பு போல இந்த திட்டம் இருந்துவிடக் கூடாது. உ.பி அரசு 60,244 காவல் பணியிடங்களுக்கான தேர்வை அறிவித்தபோது 48 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 2 தினங்களுக்கு முன் அந்த அறிவிப்பை உ.பி அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால், இந்தியாவில் வேலையின்மை நெருக்கடி தரும் நிலையில் இல்லை என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வேலையின்மை, பணவீக்க பிரச்சனையை ஒன்றிய அரசு தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்”

சார்ந்த செய்திகள்