Skip to main content

“பெரும்பான்மை இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்” - மம்தா பானர்ஜி

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Mamata Banerjee says They think they can do whatever they want because they are in the majority

மேற்கு வங்க எம்.பி. மஹுவா மொய்த்ரா, அதானி குழுமம் மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தனியிடம் லஞ்சம் பெற்றதாக பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து பா.ஜ.க எம்.பி. நிஷாகாந்த் துபே, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதிய கடிதத்தில், “மஹுவா மொய்த்ரா நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு தொழிலதிபரான ஹிரானந்தனியிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். மொய்த்ராவின் கேள்விகள் அனைத்தும் ஹிரானந்தனியின் நலனுக்காகத்தான் இருந்திருக்கிறது.

இதற்காக 2 கோடி பணம் மற்றும் விலை உயர்ந்த ஐ ஃபோன் போன்ற பரிசுப் பொருட்களை ஹிரானந்தனியின் நிறுவனம் மொய்த்ராவுக்கு தந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தேர்தலில் போட்டியிடுவதற்காக ரூ. 75 லட்சம் மொய்த்ராவுக்கு, ஹிரானந்தனி நிறுவனம் கொடுத்துள்ளது. கடந்த 2019 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் மொய்த்ரா நாடாளுமன்றத்தில் 61 கேள்விகள் கேட்டுள்ளார். அதில் 50 கேள்விகள் தர்ஷன் ஹிரானந்தனிக்கு சாதகமான கேள்விகளே கேட்கப்பட்டுள்ளது. எனவே, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பா.ஜ.க எம்.பி. வைத்த குற்றச்சாட்டுகளை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மொய்த்ரா திட்டவட்டமாக மறுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற நன்னடத்தை குழு, மஹுவா மொய்த்ராவிடம் விசாரணை நடத்தியது. அதில் நன்னடத்தைக் குழுவில் இடம்பெற்றுள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க பரிந்துரை செய்துள்ளனர். இந்த பரிந்துரை அறிக்கை தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், நன்னடத்தை குழு மஹூவா மொய்த்ரா எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை இன்று (08-12-23) மக்களவையில் தாக்கல் செய்தது. இதையடுத்து, மக்களவையில் இந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவையில் எம்.பி மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் தொடர்பாக தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் மக்களவையில் இருந்து வெளியேறிய நிலையில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு எம்.பி.பதவியில் இருந்து மஹுவா மொய்த்ரா நீக்கம் செய்யப்பட்டார். மஹூவா மொய்த்ரா மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடத்தினர். 

இந்த விவகாரம் குறித்து பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, “பா.ஜ.க.வின் அணுகுமுறையை கண்டு நான் வருத்தப்படுகிறேன். அவர்கள் ஜனநாயகத்தை கொன்றுள்ளனர். மஹுவா மொய்த்ராவின் நிலைப்பாட்டை விளக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக தன்னை தற்காத்து கொள்ளும் வாய்ப்பை மொய்த்ராவுக்கு ஆளுங்கட்சி மறுத்துள்ளது. இதன் மூலம் முழு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல்.

அவர்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பா.ஜ.க.கட்சியினர் நினைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆட்சியில் இல்லாத ஒரு நாள் வரக்கூடும் என்பதை அவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். பா.ஜ.க.வின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் தகுந்த பதிலடி தருவார்கள். மஹுவா மொய்த்ரா பாதிக்கப்பட்டவர் என்பதை நான் இங்கு சொல்கிறேன். பா.ஜ.க.வின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்தியா கூட்டணியுடன் இணைந்து எங்களுடைய கட்சி போராடும்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்