மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் 4 வயது பள்ளி சிறுமிகள் 2 பேருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து பத்லாபூர் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அம்மாநில அமைச்சர் கிரிஷ் மகாஜன், பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் போராட்டக்காரர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் ரயில் சேவையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள பொருட்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதே சமயம் குற்றத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளியை போலீசார் ஏற்கனவே கைது செய்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் தான் இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் நடந்த பள்ளி மீதும் கடும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார். அதோடு இந்த வழக்கை போலீசார் விரைந்து விசாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாகத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அலுவலகத்தின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்த பத்லாபூர் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை உடனடியாக சஸ்பெண்ட் செய்யுமாறு தானே காவல்துறை ஆணையருக்குத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பத்லாபூர் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக போராட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்ற போலீசார் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.