நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், 543 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பெயர்களை பா.ஜ.க. வெளியிட்டிருந்தது. அதேபோன்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் இரண்டு கட்டங்களாக 83 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 72 வேட்பாளர்கள் அடங்கிய 2 ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க இன்று (13.03.2024) வெளியிட்டுள்ளது. அதன்படி ஹரியானாவின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் ஹரியானாவின் கர்ணல் தொகுதியிலும், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் இமாச்சலப் பிரதேசம் ஹரிமீர்பூர் தொகுதியிலும், கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹவேரி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
மேலும் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா ஷிமோகா தொகுதியிலும், பா.ஜ.க. தேசிய இளைஞரணி தலைவர் தேஜஸ்வி சூர்யா பெங்களூரு தெற்கு தொகுதியிலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மும்பை வடக்கு தொகுதியிலும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் தொகுதியிலும், மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தர்வாத் தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். அதே சமயம் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலிலும் தமிழக பா.ஜ.க. வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.