Skip to main content

முன்னாள் முதல்வரின் சகோதரர் கொலை வழக்கு; முக்கிய சாட்சி மர்ம மரணம்!

Published on 07/03/2025 | Edited on 07/03/2025

 

Key witness passed away mysteriously YSR's brother case in andhra pradesh

கடந்தாண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டியை வீழ்த்தி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். அதன்படி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் - ஜன சங்கம் - பா-.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் சகோதரர் ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் முக்கிய சாட்சியான ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் சகோதரரும், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பாவுமான ஒய்.எஸ்.விவேகானந்த ரெட்டி, கடந்த 2019 மார்ச் 15ஆம் தேதி அன்று புலிவேந்துலாவில் உள்ள அவரது வீட்டில் படுகொலை செய்யப்பட்டார். 

விவேகாந்த ரெட்டி கொலை தொடர்பாக மத்தியப் புலனாய்வு குழு (சிபிஐ) விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில்,  ஸ்ரீனிவாச ரெட்டி, கங்காதர ரெட்டி, ஓட்டுநர் நாராயண, டாக்டர் ஒய்.எஸ்.அபிஷேக் ரெட்டி, கட்டிகரெட்டி மற்றும் ரங்கண்ணா ஆகியோர் முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட்டனர். அதில், காவலாளி ரங்கண்ணாவின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டு அவர் முக்கிய சாட்சியாக மாற்றப்பட்டார். 

இந்த நிலையில், முக்கிய சாட்சியான ரங்கண்ணா (85) கடப்பா மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டில் மார்ச் 5ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம், இந்த வழக்கின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ரங்கண்ணாவின் மரணத்திற்கும், விவேகானந்த ரெட்டி கொலை வழக்குக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சார்ந்த செய்திகள்