Skip to main content

ஐ.டி., உலோக பங்குகள் ஏற்றம்! நிதி, ரியல் எஸ்டேட் பங்குகள் சரிவு!! ஜூலை 14 எப்படி இருக்கும்?

Published on 14/07/2020 | Edited on 14/07/2020

 

share market


நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்களன்று (ஜூலை 13) இந்தியப் பங்குச்சந்தைகள் கணிசமான ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்திருக்கிறது. 


மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் எஸ் அண்டு பி பீ.எஸ்.இ. 36,693.69 புள்ளிகளுடன் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. கடந்த வார கடைசி நாள் வர்த்தகத்துடன் ஒப்பிடுகையில் இது 99.36 புள்ளிகள் / 0.27 சதவீதம் ஏற்றமாகும்.


தேசிய பங்குச்சந்தையான நிப்டி, 10,892 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருந்தது. இது, முந்தைய நாளைக் காட்டிலும் 34.65 புள்ளிகள் அல்லது 0.32 சதவீதம் உயர்வாகும். நிப்டி 50-இல் உள்ள நிறுவனங்களில் 33 பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 16 பங்குகளின் மதிப்பு சரிந்தன. ஒரு பங்கு விலையில் மற்றும் எந்த மாற்றமும் நிகழவில்லை.


ஏற்ற இறக்கம்:


நிப்டியில் டெக் மஹிந்திரா (5.54%), ஹிண்டால்கோ (3.79%), ஹெச்.சி.எல். டெக் (3.74%), ஜேஎஸ்டபுள்யூ ஸ்டீல் (3.26%), ரிலையன்ஸ் (3.23%) ஆகிய பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன. 


பவர்கிரிட், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்.டி.எப்.சி. வங்கி, ஹெச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ஆகிய பங்குகள் முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளித்தன.


ஒட்டுமொத்த அளவில் ஐ.டி., உலோகம், நுகர்பொருள் சந்தை, எனர்ஜி துறை, ஊடகத்துறை சார்ந்த பங்குகள் ஓரளவு முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்தன. நிதிச்சேவைகள், ரியல் எஸ்டேட், பொதுத்துறை வங்கிப் பங்குகள் கடும் சரிவைச் சந்தித்தன.


ஜூலை 14 எப்படி இருக்கும்?:


''பணவீக்க விகிதங்களின் சுமையைக் குறைக்க, இந்திய ரிசர்வ் வங்கியிடம் இருந்து மேலும் ஊக்க நடவடிக்கைகளைச் சந்தைகள் எதிர்பார்க்கின்றன. இது மத்திய வங்கியின் வட்டி விகிதத்தை மேலும் குறைக்க வழிவகுக்கும். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பங்கு சார்ந்த நகர்வுகள் குறித்து கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்'', என்கிறார் ஜியோஜித் நிதிச்சேவைகளின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் வினோத் நாயர்.
 

share market


நிப்டிக்கான முக்கிய ஆதரவு நிலை 10,741.13 புள்ளிகளாகவும் அதைத் தொடர்ந்து 10,679.57 ஆகவும் உள்ளன. குறியீடு மேலே நகர்ந்தால் கவனிக்க வேண்டிய முக்கிய எதிர்ப்பு நிலை 10,879.13 மற்றும் 10,955.57 புள்ளிகளாக இருக்கும். 


நிப்டி வங்கி:


நிப்டி வங்கிப் பங்குகளைப் பொருத்தவரை ஜூலை 13ஆம் தேதி, 1.38 சதவீதம் குறைந்து 22,089.25 புள்ளிகளில் வர்த்தகம் முடிவடைந்தது. முக்கியமான மைய நிலை 21,828.13 ஆகவும், அதைத் தொடர்ந்து 21,567.06 ஆகவும் உள்ளது. தலைகீழாக, முக்கிய எதிர்ப்பு நிலைகள் 22,503.83 மற்றும் 22,918.47 புள்ளிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆதாய எதிர்பார்ப்பு உள்ள பங்குகள்: 


காலாண்டு முடிவுகள், நிறுவனங்களின் ஸ்திரத்தன்மை அடிப்படையில் சில பங்குகளுக்குச் சந்தையில் எப்போதும் வரவேற்பு இருக்கும். 


அதன்படி, பி.ஏ.எஸ்.எப். இண்டியா, ஐ.ஓ.எல். கெமிக்கல்ஸ், டாக்டர் லால் பாத்லாப்ஸ், சுவென் பார்மா அண்டு டாடா கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் ஆதாயம் அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு முதலீட்டாளர்களிடம் நிலவுகிறது.

 

http://onelink.to/nknapp


இன்று ரிசல்ட் அறிவிக்கும் நிறுவனங்கள்: 


விப்ரோ, மைண்ட்ரீ, பாரக் வேலி சிமெண்ட்ஸ், செஞ்சுரி டெக்ஸ்டைல்ஸ், டெல்டா கார்ப், ஹிந்துஸ்தான் காப்பர், காதிம் இண்டியா, நேஷனல் பேரடாக்ஸ், ஆப்டோ சர்கியூட்ஸ், பாரமவுண்ட் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்ஷர் ஆகிய நிறுவனங்கள் ஜனவரி - மார்ச் காலாண்டு முடிவுகளை இன்று அறிவிக்கின்றன. இந்த முடிவுகளின் அடிப்படையில் இப்பங்குகளின் விலைகளில் ஏற்றம், இறக்கம் தென்படும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளாவில் பொருளாதார நெருக்கடி? - உயர்நீதிமன்றம்

Published on 02/11/2023 | Edited on 02/11/2023

 

 High Court questioned Economic crisis in Kerala?

 

கேரளா மாநிலத்தில், கேரளா அரசின் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த நிதி நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு கடன் கொடுத்த வகையில் ரூ.900 கோடி பணம் இன்னும் திரும்ப வரவில்லை. இதனால், எங்களுடைய நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் இருக்கிறது. எனவே, அந்த பணத்தை உடனே வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. 

 

இது தொடர்பான மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, இது குறித்து உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘அரசு கடும் நிதி நெருக்கடியில் இருக்கிறது. அதனால், போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்திற்கு பண உதவி செய்ய முடியாது’ என்று கூறப்பட்டிருந்தது. 

 

இந்த பதில் மனுவை நேற்று (01-11-23) பரிசீலித்த உயர்நீதிமன்றம், கேரள அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் உயர்நீதிமன்றம், ‘கேரள அரசின் விளக்கம் கேரளாவை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது. அரசின் இந்த விளக்கத்தை வைத்துத்தான் தேசிய அளவில் கேரளா குறித்து பேசப்படும். நிதி நிலைமை மோசமாக இருந்தால், கேரளாவின் பொருளாதார நெருக்கடி நிலையை அறிவிக்க வேண்டிய நிலை வரும். அதற்கான உரிமை உயர்நீதிமன்றத்திற்கும் உண்டு. அரசு உத்தரவாதத்தை நம்பித் தான் போக்குவரத்து மேலாண்மை நிதி நிறுவனத்தில் பலரும் முதலீடு செய்தனர். கேரளாவில் இந்த நிலை நீடித்தால் முதலீடு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள். எனவே, அரசு வேறு ஒரு மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தது. 

 

 

Next Story

15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை; 500 கோடி ரூபாய் மோசடி வழக்கில் திருப்பம்!

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

15 lakh page charge sheet against real estate owner
வின் ஸ்டார் சிவக்குமார்

 

சேலத்தில், ரியல் எஸ்டேட் அதிபர் வின் ஸ்டார் சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதான மோசடி வழக்கில் 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது.    

 

சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சிவக்குமார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே, வின் ஸ்டார் இண்டியா சிட்டி டெவலப்பர்ஸ் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி வந்தார். நிலத்தில் முதலீடு செய்தால் 11 மாதத்தில் இரட்டிப்பு விலை கொடுத்து நாங்களே நிலத்தை வாங்கிக் கொள்கிறோம் அல்லது அதற்கு நிகரான லாபத்தைக் கொடுத்து விடுவதோடு, அசல் முதலீட்டையும் கொடுத்து விடுகிறோம் என்று பல்வேறு விதமான கவர்ச்சி அறிவிப்புகளை வின் ஸ்டார் நிறுவனத்தார் வெளியிட்டனர். ஒருகட்டத்தில், எம்எல்எம் முறையிலும் ரியல் எஸ்டேட் தொழிலை நடத்தினர்.    

 

கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி 4000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் வின் ஸ்டார் நிறுவனத்தில் முதலீடுகளை கொட்டினர். இத்துடன் நில்லாமல் வின் ஸ்டார் பெயரில் ஜவுளிக்கடை, உள்ளூர் கேபிள் டிவி, ஸ்வீட் கடைகள், ஜவுளிக்கடை, பட்டாசு தொழில், நெல்லிச்சாறு விற்பனை உள்ளிட்ட தொழில்களிலும் இறங்கினார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஓரளவு லாபம் பார்த்த முதலீட்டாளர்கள் அவர் தொடங்கிய மற்ற தொழில்களிலும் முதலீடு செய்தனர்.  இந்நிலையில், திடீரென்று சிவக்குமார் பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்தார். முதிர்வு காலத்திற்குப் பிறகும் முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினார்.    

 

இதையடுத்து அவர் மீது 1686 முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து, கடந்த 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சிவக்குமாரை கைது செய்தனர். அவர் உட்பட 30 பேருக்கு இந்த மோசடியில் பங்கிருப்பதும், 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்திருப்பதும் தெரிய வந்தது. முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவதாக நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை அடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, கோவையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி தங்கராசு தலைமையில் இந்த வழக்கை விசாரிக்க ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.     

 

இந்தக் குழுவின் விசாரணையில், முதலீட்டாளர்களிடம் சுருட்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொண்டு சிவக்குமார் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் நிலங்களையும், வீடுகளையும் வாங்கிக் குவித்து இருப்பது தெரிய வந்தது.  பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், தற்போது சிவக்குமார் உள்ளிட்ட 30 பேர் மீதும் கோவையில் உள்ள டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதற்காக ஒரு நபருக்கு 50 ஆயிரம் பக்கங்கள் வீதம், குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 பேருக்கும் மொத்தம் 15 லட்சம் பக்கங்களில் குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளது. குற்றப்பத்திரிகை ஆவணங்களை நகல் எடுப்பதற்காகவே 14 லட்சம் ரூபாய்க்கு தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்  விடப்பட்டது.       

 

இந்த வழக்கு, டான்பிட் நீதிமன்றத்தில் அக். 5ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அப்போது நீதிபதி முன்பு குற்றப்பத்திரிகை ஆவணங்கள்  தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்காக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை ஆவணங்களும் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் சேலத்தில் இருந்து அக். 2ஆம் தேதி டான்பிட் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழகத்தில், ஒரு மோசடி வழக்கில் முதன்முதலாக 15 லட்சம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுவது வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.