இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் ஆளுநர்களுக்கு சில அதிகாரங்கள் வரையறை செய்யப்பட்டிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மையான ஒரு கட்சி மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது. இருப்பினும் அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளும் ஆளுநரின் ஒப்புதலின் அடிப்படையிலேயே நடக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்தின் நிர்வாகப் பொறுப்புக்கு ஆளுநரே தலைவர்.
இருந்தாலும் முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். பெரும்பாலும் இவைகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளித்துவிடுவர். ஆனால், சில ஆண்டுகளாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மக்கள் நலன் சார்ந்த சில மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிப்பதில்லை. இதனால் சட்ட சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, தண்டனை காலம் முடிந்தும் நீண்ட வருடங்களாக சிறைக் கொட்டடியில் இருக்கும் 7 பேர் விடுதலை, நீட் தேர்வு விலக்கு மசோதா ஆகியவைகள் மீது ஆளுநர் கே.என்.ரவி முடிவெடுக்காமல் கால தாமதம் செய்து வருகிறார்.
திமுக ஆட்சி வந்ததும் நீட் தேர்வுக்கு விலக்களிக்க அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்று சட்டப்பேரவையில் அதற்கான சட்ட மசோதாவை பேரவை உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்க ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழக சட்டமன்றம். ஆனால், இதனை நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்துவிட்டு திடீரென திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவி.
அப்படி அவர் திருப்பியனுப்பிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், நீட் தேர்வு விலக்களிக்கும் அந்த சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒரே பொருள் குறித்த சட்ட மசோதா மீண்டும் தனது ஒப்புதலுக்கு இரண்டாவது முறையாக தமிழக அரசு அனுப்பி வைத்தால் அதனை நிராகரிக்கவோ, திருப்பி அனுப்பவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. முறையாக அதனை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தாக வேண்டும். ஆனால், அதனை செய்யாமல் மீண்டும் கிடப்பில் வைத்திருக்கிறார் ஆளுநர் ரவி.
சட்டமன்றம் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு கால நிர்ணயம் எதையும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் நிர்ணயிக்கவில்லை. இந்த ஷரத்தை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமில்லாத சட்ட மசோதாக்களை கிடப்பில் வைத்து விடுகிறார் ஆளுநர். இது அவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்.
அந்த வகையில், இந்த அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் நீட் தேர்வு விலக்கு மசோதாவை கிடப்பில் போட்டு வைத்துள்ளார் ஆளுநர் ரவி. இது குறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முதலாவர் வலியுறுத்திய போதும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. இதனால் மாநில அரசுக்கும் ராஜ்பவனுக்குமான உறவுகளில் தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதும், தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதும் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.
இந்த நிலையில், ஆளுநரின் அதிகாரத்தில் திருத்தம் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் தனி நபர் தீர்மானத்தை தாக்கல் செய்ய திமுக எம்.பி. வில்சனுக்கு அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
அதன்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்தம் செய்யவும், மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்கும் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தனி நபர் தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் இன்று தாக்கல் செய்கிறார் திமுக எம்.பி.யும் வழக்கறிஞருமான வில்சன்.