இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, டெல்லி, மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை அந்தந்த மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய அரசும் மாநிலங்களுக்குத் தேவையான கரோனா தடுப்பூசிகள், ஆக்சிஜன் போன்றவற்றை விமானங்கள் மூலமும், ரயில்கள் மூலமும் அனுப்பி வைத்து வருகிறது. இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்கள் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன. சில மாநிலங்கள் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல்வேறு முறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஏழை மக்களுக்கு உதவும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 மாத ரேஷன் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மொத்தம் டெல்லியில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் இருப்பதாக கூறியுள்ள அவர், 2 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால், ஊரடங்கு இரண்டு மாதம் நீடிக்கும் என அர்த்தம் கிடையாது என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு தலா ரூபாய் 5,000 வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.