Skip to main content

சாவர்க்கர் குறித்து ராகுல் காந்தி கருத்து; ‘சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக பேசக்கூடாது’ - நீதிமன்றம் சாடல்

Published on 25/04/2025 | Edited on 25/04/2025

 

court says should not speak against freedom fighters to Rahul Gandhi's comment on Savarkar

கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின் தலைவரான சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்த போது ஆங்கிலேயர்களுக்கு எழுதிய மன்னிப்புக் கடிதத்தை வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர், “தன்னைப் பற்றி வேறொருவர் பெயரில் புத்தகம் எழுதி, அதில் தன்னையே வீரர் என்று குறிப்பிட்டுக் கொண்டவர் தான் சாவர்க்கர். ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதினார்.  ஆங்கிலேயர்களிடம் இருந்து ஓய்வூதியம் பெற்றவர் சாவர்க்கர். மகாத்மா காந்தி, நேரு, பட்டேல் உள்ளிட்டோர் சிறையில் வாடியுள்ளனர். ஆனால், அவர்கள் யாரும் இதுபோன்ற மன்னிப்புக் கடிதம் எழுதியதில்லை” என்று பேசினார். மேலும் அவர், சாவர்க்கரை காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து ஓய்வூதியம் பெற்ற பிரிட்டிஷ் வேலைக்காரன் என்று கூறியதாகக் கூறப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்த பேச்சு, பா.ஜ.கவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அதனால், ராகுல் காந்திக்கு எதிராக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. எனவே, தனக்கு எதிரான சம்மனை ரத்து செய்யக் கோரி ராகுல் காந்தி அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீடு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் திபாங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இந்த கருத்தின் மூலம் பகைமையத் தூண்டும் நோக்கம் ராகுல் காந்திக்கு இல்லை என வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், “ராகுல் காந்திக்கு,  மகாத்மா காந்தி கூட ‘உங்கள் உண்மையுள்ள வேலைக்காரன்’ என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியது தெரியுமா? அவரது பாட்டியும் சுதந்திரப் போராட்ட வீரருக்கு ஒரு கடிதம் அனுப்பியது அவருக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு அரசியல் கட்சித் தலைவர். ஏன் இது போன்ற கருத்துக்களைச் சொல்ல வேண்டும்?. இனிமேல் இதைச் செய்யாதீர்கள். பகைமையைத் தூண்டிவிடுவது நோக்கம் இல்லையென்றால், ஏன் இதுபோன்ற கருத்துக்களைச் சொல்ல வேண்டும்?. நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு எதிராக இதுபோன்ற கருத்துக்களை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது. மீண்டும் மீண்டும் இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்தால் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறி எச்சரிக்கை விடுத்தனர். 

சார்ந்த செய்திகள்