
தனது மனைவி திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கணவன் கூறிய கூற்றை சரிபார்க்க பெண்ணின் குரல் மாதிரியை வழங்குமாறு மும்பை உயர்நீதிமன்றத்தின் ஒளரங்காபாத் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவரும் மாமியாரும் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி குடும்ப நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பான வழக்கு அந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அப்போது அந்த நபர், தனது மனைவி வேறொருவருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டி, அவர்கள் இருவரும் பேசிக் கொள்ளும் குரல் பதிவுகள் அடங்கிய மெமரி கார்டு மற்றும் சிடியை நீதிமன்றத்தில் சமர்பித்தார்.
ஆனால் அந்தப் பெண், தனது கணவர் வைத்த குற்றச்சாட்டுகளை மறுத்தது மட்டுமல்லாமல் அந்த பதிவுகளில் இருப்பது தனது குரல் அல்ல என வாதிட்டார். இதையடுத்து அந்த நபர், அஹில்யாந்கர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில், தனது மனைவிக்கு குரல் மாதிரியை வழங்க உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், அதனை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஷைலேஷ் பிராம் தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதி, ‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் குரல் மாதிரிகளை வழங்குமாறு ஒரு தரப்பினரை வழிநடத்த எந்த விதிகளும் இல்லை. ஆனால், தற்போதைய வழக்கின் நடவடிக்கைகள் அரை சிவில் மற்றும் அரை குற்றவியல். அந்த நபர் நம்பியிருக்கும் மின்னணு சான்றுகள் ஒரு சான்று என்று மதிப்பைக் கொண்டிருப்பதால், பெண் தனது குரல் மாதிரியை சரிபார்ப்புக்காக கொடுப்பதற்கு கடமைப்பட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தின் வருகையால், மின்னணு சான்றுகள் வழக்கமான சான்றுகளை மாற்றி வருகின்றன. எனவே, உண்மை கண்டறியும் அதிகாரியாக இருக்கும் ஒரு நீதிபதிக்கு அதிக அதிகாரங்களை முதலீடு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, கணவர் வைத்த குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு அந்த பெண் தனது குரல் மாதிரியை வழங்க வேண்டும்’ என்று கூறி உத்தரவிட்டார்.