Skip to main content

விவசாயிகள் மீது திட்டமிட்டு தாக்குதல் - ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!

Published on 06/10/2021 | Edited on 06/10/2021

 

congress leader rahul gandhi mp pressmeet at delhi

 

உத்தரப்பிரதேசம், லக்கிம்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட வன்முறையில் விவசாயிகள், பாஜகவினர், பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  ஆறுதல் கூறுவதற்காகச் சென்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, கிராம எல்லையிலேயே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். மேலும், சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டார். அதேபோல், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வந்த பஞ்சாப் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரை விமான நிலையத்தைவிட்டு வெளியேற அம்மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை. 

 

இந்த நிலையில், கார் மோதி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 45 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச அரசு அறிவித்திருந்தது. 

 

இந்நிலையில், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி தலைமையிலான குழு இன்று (06/10/2021) லக்கிம்பூருக்குச் செல்லவிருந்தது. ஆனால், அக்குழுவுக்கும் மாநில அரசு அனுமதி வழங்கவில்லை. 

 

இந்தச் சூழலில் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி எம்.பி., "ஜீப்பால் மோதி விவசாயிகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் கொல்லப்பட்ட வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அகங்காரத்தின் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிராகரிக்கிறது. என்னையும், என் குடும்பத்தினரையும் துன்புறுத்தினாலும் நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்போம். நேற்று லக்னோ சென்ற பிரதமர் நரேந்திர மோடி, லக்கிம்பூர் செல்லாதது ஏன்? எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தால்தான் இந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வாதிகாரப் போக்குடன் அரசு நடந்துகொள்கிறது; அரசியல் தலைவர்களை உத்தரப்பிரதேசத்தில் அனுமதிக்காதது ஏன்? காங்கிரஸ் அரசியல் செய்யவில்லை. இறந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு நியாயம்தான் கேட்கிறோம்" எனத் தெரிவித்தார். 

 

இதனிடையே, அரசு அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி லக்கிம்பூர் செல்ல ராகுல் காந்தி எம்.பி. திட்டமிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Arvind Kejriwal enforcement department extension

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், அதில் 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஆம் ஆத்மி கட்சியினர் அங்கு போராட்டம் நடத்தினர். பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே அதிரடி விரைவுப் படையினர் (R.A.F.) குவிக்கப்பட்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மார்ச் 28 வரை என 7 நாட்கள் அமலாக்கத்துறை விசாரணைக் காவல் விதித்து செல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அமலாக்கத்துறையின் விசாரணைக் காவல் முடிந்து கெஜ்ரிவால் டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று (28.03.2024) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கெஜ்ரிவால் காவலை 7 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என அமலாக்கத்துறை கோரியது. அதற்கு நாங்கள் விரும்பும் வரை அமலாக்கத்துறை எங்களை விசாரிக்கலாம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இத்தகைய சூழலில் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கெஜ்ரிவாலை மீண்டும் ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.