Skip to main content

சமாஜ்வாடி அரசு செயல்படுத்திய திட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 40 இடங்களில் சிபிஐ சோதனை!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

akhilesh yadav

 

உத்தரப்பிரதேசத்தில் 2015ஆம் ஆண்டு, கோமதி ஆற்றங்கரை மேம்பாட்டு திட்டத்தை அப்போது ஆட்சியில் இருந்த சமாஜ்வாடி அரசு செயல்படுத்தியது. இதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து 2017ஆம் ஆண்டு அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்த பாஜக, இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்குமாறு சிபிஐ-க்குப் பரிந்துரைத்தது.

 

இதனையொட்டி சிபிஐ இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வழக்குப் பதிவுசெய்தது. இதன்தொடர்ச்சியாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், லக்னோ பிரிவின் முன்னாள் நிர்வாகப் பொறியாளராக இருந்த ரூப் சிங் யாதவ் மற்றும் லக்னோ நீர்பாசனப் பணிகளுக்கான முன்னாள் உதவியாளர் ராஜ் குமார் யாதவ் ஆகியோரை இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதியளித்தது.

 

இந்தநிலையில் காசியாபாத், லக்னோ, ஆக்ரா உள்ளிட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள 40 இடங்களில் சிபிஐ இன்று (05.07.2021) சோதனை நடத்திவருகிறது. அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சி ஆட்சியில் இருக்கும்போது நிறைவேற்றிய திட்டம் தொடர்பாக சிபிஐ சோதனை நடத்திவருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்