
சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கிய பா.ஜ.க எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏவாக பொறுப்பு வகித்து வருபவர் கலி ஜனார்த்தன் ரெட்டி. இவர், முன்னாள் அமைச்சராக பதவி வகித்துள்ளார். அதுமட்டுமின்றி சுரங்கத் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில், 2007 -2009 காலகட்டத்தில் கர்நாடகா - ஆந்திரப் பிரதேச எல்லையில் உள்ள பெல்லாரி ரிசர்வு வனப்பகுதியில் சுரங்க குத்தகை எல்லைகளை கையாண்டதாகவும், ஒபுலாபுரம் சுரங்க நிறுவன (ஓஎம்சி) சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் கலி ஜனார்த்தன் ரெட்டி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலால், கருவூலத்திற்கு ₹884 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு கர்நாடகா அரசியலில் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பான வழக்கு ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 14 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கலி ஜனார்த்தன் ரெட்டி குற்றவாளி என்று கருதப்பட்டு நேற்று இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில், கலி ஜனார்த்தன் ரெட்டி மற்றும் இந்த வழக்கில் தொடர்புடைய மூன்று பேருக்கும் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.10,000 அபராதமும், நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பதவியில் இருக்கும் எம்.எல்.ஏவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டது.