
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பொதுமக்களுக்கு முக்கிய கோரிக்கை உடனான அறிவிப்பை என்ஐஏ வெளியிட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை எனப்படும் என்ஐஏ அமைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் தீவிரவாதிகள் தொடர்பாக ஏதேனும் கூடுதல் தகவல்கள் அல்லது உங்கள் ஃபோனில் எடுத்த வீடியோக்கள், புகைப்படங்கள் இருந்தால் வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளது. ஏற்கனவே பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக தகவல் கொடுப்பவர்களுக்கு 20 லட்சம் ரூபாய் சன்மானம் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது என்ஐஏ சார்பில் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.