நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்மையில் காங்கிரஸ் தங்களுடைய தேர்தல் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், பாஜக தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிடும் இறுதிக்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை காலை 8.30 மணிக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி முன்னிலையில் வெளியிடப்படும் எனப் பாஜக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு பாஜகவின் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பாஜகவின் தேர்தல் அறிக்கையை நாளை வெளியிடுகின்றனர்.