Published on 06/05/2020 | Edited on 06/05/2020
மதுக்கடை வாசலில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணிக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை நியமித்த ஆந்திர அரசின் செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் சூழலில், இரண்டு நாட்களாக டெல்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவில் மதுக்கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த அரசுப் பள்ளி ஆசிரியர்களை நியமித்த ஆந்திர அரசின் செயல் தற்போது சர்ச்சையாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாளில் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு கடை வாசல்களில் அலைமோதியது. இதனையடுத்து காவலர்களும், தன்னார்வலர்களும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனாலும் கூட்டம் தொடர்ந்து அதிகரித்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன் காரணமாகக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்களாக, அரசுப் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களை நியமிக்க ஆந்திர அரசு முடிவு செய்தது.
நேற்று மதுக்கடைகளுக்கு சென்ற ஆசிரியர்கள் அங்கு டோக்கன் கொடுப்பது, கூட்டத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர். மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்து (டி.இ.ஓ) வாய்வழி உத்தரவுகளை மட்டுமே பெற்று, ஆசிரியர்களை காவல்துறையினர் இந்த பணியில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் பாடம் நடத்தும் ஆசிரியர்களை மதுக்கடை வாசல்களில் டோக்கன் கொடுக்க வைப்பது கண்டிக்கத்தக்க ஒன்று என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.