
அரசு மறுவாழ்வு மையத்தில் சாப்பிட்ட 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் அரசு மறுவாழ்வு மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என மொத்தம் 140க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி வருகின்றனர்.
இந்த நிலையில், இங்கிருந்த 20 குழந்தைகளுக்கு நேற்று மாலை திடீரென்று உடல்நலம் சரியில்லாமல் போயுள்ளது. உடனடியாக அவர்களை சிகிச்சைக்காக லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த 20 குழந்தைகளில் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மீதமுள்ள 16 குழந்தைகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 குழந்தைகள் திடீரென்று உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மறுவாழ்வு மையத்தில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பிறகு, குழந்தைகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் உணவில் மாசுபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனால், இந்த சம்பவத்தை விசாரிக்க லக்னோ மாவட்ட நீதிபதி ஒரு குழுவை அமைத்துள்ளார். அதன்படி, அதிகாரிகள் அந்த உணவு மாதிரியை எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் என மொத்த 4 குழந்தைகளுக்கு 12 வயதில் இருந்து 17 வயது வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.