
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்குக் கடல் மார்க்கமாக வந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் தேதி (26.11.2008) சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்ந்து பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 166 பேர் பலியானார்கள். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லி மும்பை வந்து செல்வதற்காக அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளித்து வரும் தஹாவூர் ஹுசைன் ராணா (வயது 65) என்பவர் உதவியுள்ளார்.
பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற இவர் அமெரிக்காவில் குடியுரிமை சேவை அளிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் அமெரிக்காவில் சிகாகோவில் வசித்து வந்த நிலையில் அந்நாட்டு போலீசாரால் 2009ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு அமெரிக்காவில் உள்ள சிறையில் இருந்து வந்தார். இவரை மும்பை தாக்குதல் வழக்கில் விசாரணைக்காக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து தஹாவூர் ராணாவை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில் தஹாவ்வூர் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டு இன்று (10.04.2025) அழைத்து வரப்பட்டுள்ளார். அதாவது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமானவியல் நிறுவனத்திற்கு (ஐ.ஜி.ஐ.ஏ.) தஹாவூர் ராணா இன்று மாலை அழைத்து வரப்பட்டார். மூத்த அதிகாரிகள் அடங்கிய தேசிய பாதுகாப்பு காவலர் (NSG) மற்றும் என்.ஐ.ஏ. குழுக்களால் ராணா டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போதே அவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) முறைப்படி கைது செய்தனர். தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, விமானத்திலிருந்து வெளியே வந்த சிறிது நேரத்திலேயே, ராணாவை என்.ஐ.ஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது.