Skip to main content

150 அடி தேர் கவிழ்ந்து விபத்து; வெளியான பரபரப்பு காட்சி

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
150 feet chariot overturned accident; Exciting scene released

திருவிழாவில் பக்தர்களால் வடம் பிடித்து இழுத்துச் செல்லப்பட்ட 150 அடி உயரம் கொண்ட தேர் சாய்ந்து விழும் பரபரப்பு வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள ஹூஸ்கூர்  என்னும் கிராமத்தில் தேர் திருவிழா இன்று நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் கோவில் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 150 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரை பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தேர் சாய்ந்து விழுந்தது. தேர் சாய்ந்து விழுவதை சுதாரித்துக்கொண்ட பக்தர்கள் உடனடியாக அங்கிருந்து ஓடியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால் இதில் ஏராளமான பக்தர்கள் காயத்துடன் மீட்கப்பட்டு அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 150 அடி தேர் சாய்ந்து விழுந்த இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

2000-க்கும் மேல் ஆபாச வீடியோக்கள்? பென் டிரைவ் முழுவதும் பெண்கள்; சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

கர்நாடகா மாநிலத்தில், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பா.ஜ.கவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா அவரது மகன்கள் ரேவண்ணா, குமாரசாமி ஆகியோரைத் தொடர்ந்து தேவகவுடா பேரன்கள் நிகில் குமாரசாமி, பிரஜ்வால் ரேவண்ணா ஆகியோரும் தீவிர அரசியலில் உள்ளனர். இவர்களில், ஹாசன் தொகுதியில் எம்.பியாக உள்ள பிரஜ்வால் ரேவண்ணா, இந்த முறை பா.ஜ.க கூட்டணியில் போட்டியிட்டார். இவர், தேவகவுடாவின் பேரனும், முன்னாள் அமைச்சர் ஹெச்.டி.ரேவண்ணாவின் மூத்த மகனும் ஆவார். 

இதனால், இவர் போட்டியிடும் தொகுதியில் பா.ஜ.க கூட்டணி சார்பில் தீவிர பரப்புரை நடைபெற்று முதற்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஆனால், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும், ஹாசன் தொகுதி வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26 ஆம் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதில், அரசுத் துறையைச் சேர்ந்த சில பெண் அதிகாரிகளும் ஆபாச வீடியோவில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது, கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து, சமூக ஊடகங்களிலும் பிரஜ்வல் ரேவண்ணா பெண்களுடன் இருக்கும் ஆபாச வீடியோ பரவ இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. கர்நாடக மாநில மகளிர் ஆணையம் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கர்நாடகவின் ஹோலநரசிப்பூர் காவல் நிலையத்தில் 4 பிரிவின் கீழ் பிரஜ்வல் ரேவண்ணாவின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஜே.டி.எஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. ஆபாச வீடியோ விவகாரம் மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்கு தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த கையோடு பிரஜ்வல் ரேவண்ணா புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆதரவாளர்கள் அந்த ஆபாச வீடியோக்கள் சித்தரிக்கப்பட்டது என கூறி வருகின்றனர். பதிலுக்கு, பிரஜ்வல் ரேவண்ணாவும் தனது புகழைக் கெடுக்கும் நோக்கில் ஆபாச வீடியோக்கள் பரப்பப்படுவதாக புகார் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Controversial BJP alliance candidate and devegowda grandson for Over 2000 videos?

ஆனால், பாஜக தரப்பு பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை என கூறிவருவது சந்தேகத்தை கிளப்புவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஆபாச வீடியோ விவகாரத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய வேண்டும் என போராட்டமும் நடைபெற்று வருகிறது. முன்னதாக பென் டிரைவ் மூலமே பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச படம் பரப்பப் பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. ஆனால், விரிவான விசாரணைக்கு பிறகே முழுப் பின்னணி தெரிய வரும். அந்த பென் டிரைவில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. இன்னும் வட கர்நாடகாவில் மக்களவைத் தேர்தல் முடியாத சூழலில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, பா.ஜ.கவைச் சேர்ந்தவர்களும், கூட்டணியில் உள்ளவர்களும் ஆபாச வீடியோக்களில் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.