
கடந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த 2023 ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. ஆரம்பக் கட்டத்தில் இந்த கூட்டணிக்கு மக்களிடம் இருந்து பெரும் ஆதரவு இருந்த நிலையில், இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்தார். அதன் பிறகு, பல கட்டங்களாக கூட்டங்கள் நடத்தி இந்தியா கூட்டணி மக்களவைத் தேர்தலை சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் இந்தியா கூட்டணி தோல்வியைச் சந்தித்தது.
இதனையடுத்து நடைபெற்ற மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. இந்த தொடர் தோல்விகள், அந்த கூட்டணி தலைவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்து வரும் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் மாநில அளவில் காங்கிரஸிடம் இருந்து விலகியே சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்தது. இது இந்தியா கூட்டணியின் தொடர் தோல்விக்கு காரணம் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், இந்தியா கூட்டணியைத் தலைமை தாங்க தயாராக இருப்பதாக என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார். இது கூட்டணிக் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே, இந்தியா கூட்டணியில் இருக்கும் அரசியல் தலைவர்கள் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாக பல தலைவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமாக இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருத்யுஞ்சய் சிங் யாதவ் இணைந்து எழுதிய ‘கண்டெஸ்டிங் டெமாக்ரட்டிக் டெஃபிசிட்’ என்ற புத்தக வெளியீட்டு விழா கடந்த 15ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசியதாவது, “மிருத்யுஞ்சய் சிங் யாதவ் சொல்வது போல் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் அவ்வளவு பிரகாசமாக இல்லை. இந்தியா கூட்டணி இன்னும் அப்படியே இருப்பதாக அவர் நினைப்பதாகத் தெரிகிறது. எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. ஒருவேளை சல்மான் பதிலளிக்கலாம். ஏனென்றால் அவர் இந்தியா கூட்டணியின் பேச்சுவார்த்தைக் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார்.
இந்திய கூட்டணி முழுமையாக நிலைத்திருந்தால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பேன். ஆனால் அது பலவீனமாகத் தெரிகிறது. அதை ஒன்றாக இணைக்க முடியும். இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் நிகழ்வுகள் வெளிப்படும். எனது அனுபவத்தில், பாஜகவைப் போல இவ்வளவு வலிமையாக ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் கட்சி வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு துறையிலும், அது வலிமையாக இருக்கிறது. இது வெறும் மற்றொரு அரசியல் கட்சி அல்ல” என்று கூறினார். பா.ஜ.கவைப் பற்றி பா.சிதம்பரம் பாராட்டி பேசியதால், காங்கிரஸ் கட்சிக்கள் முனுமுனுப்பு இருந்து வருகிறது.