Skip to main content

இப்ப தெரியுதா ஏன் மோடி தமிழ் பேசுறார்னு...  ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? வெளிவராத தகவல்!

Published on 11/11/2019 | Edited on 11/11/2019

"இப்ப தெரியுதா மோடிஜி ஏன் தமிழர்களையும், தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், திருவள்ளுவரையும் தூக்கிப் பிடிக்கிறார் என்று. கொஞ்சம் கொஞ்சமாக இந்து மத சாயம் பூசத்தான் இப்படி எல்லாம் செய்து வருகிறார்'' -இப்படிக் கேட்பது கிராமத்து டீக் கடையில் இருந்து தினசரி பத்திரிகையை படித்துக்கொண்டிருந்த வயது முதிர்ந்த விவசாயி. அவர் சொல்வதிலும் முற்றிலும் உண்மைகள் இருப்பதை நம்மால் உணர முடிகிறது. 
 

bjp



தாய்லாந்து மொழி'யில் திருக்குறளை வெளியிட்ட அடுத்தகணமே திருவள்ளுவருக்கு பா.ஜ.க. இணையதளத்தில் காவி பூசப்பட்டு பட்டையும், கொட்டையும் சார்த்தப்படுகிறது. அதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் கிராம மக்களால் 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் பிறகு போலீசார் குவிக்கப்பட்டனர். சிலை சரிசெய்யப்பட்டது. சிலை அருகில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. தஞ்சை தமிழ்ப் பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். சிலையை அவமதித்த நபரை விரைவில் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால் வழக்கம்போல யாரையும் பிடிக்கவில்லை. (போராட்டங்கள் வலுப்பெற்றால் கடைசியில் ஒரு சைக்கோ செய்தான் என்று வழக்கு முடித்து வைக்கப்படும் என்பது வேறு)

 

dk



இந்த நிலையில்தான் 6-ந் தேதி தஞ்சை ராஜராஜன் சதய விழாவிற்கு தலைவர்கள் வந்து சிலைக்கு மாலை அணிவித்தனர். அந்த வகையில்தான் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், ராஜராஜன் சிலைக்கு மாலை அணிவித்த கையோடு தனது ஆதரவாளர்கள் சிலருடன் பிள்ளையார்பட்டிக்குச் சென்றார். திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு, உத்திராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசி, தீபாராதனை காட்டினார். அந்த நேரத்தில் கீழே நின்றவர்கள் "ஓம் காளி... ஜெய் காளி' என்று கோஷங்களை எழுப்பி திருவள்ளுவரை காவிகளின் தலைவராக்கினார்கள்.

 

bjp



திருவள்ளுவருக்கு காவி அணிவித்த பிறகு ராஜராஜன் அடக்கம் செய்யப்பட்ட இடமாக சொல்லப்படும் உடையாளூர் சென்று மாலை அணிவித்துவிட்டு, வெளியே வந்தபோது வல்லம் டி.எஸ்.பி. சீதாராமன் தலைமையிலான போலீசார் அர்ஜுன் சம்பத், இளைஞரணி மாநில பொதுச் செயலாளர் குருமூர்த்தி ஆகியோரை கைதுசெய்து தஞ்சை பல்கலைக்கழக காவல்நிலையத்திற்கு கொண்டுசென்றனர். அதற்குள் பல இடங்களில் இருந்தும் போலீசாருக்கு நெருக்கடி.


இந்த நிலையில்தான் பிள்ளையார்பட்டி கிராம நிர்வாக அலுவலர் வாசுதேவன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ஜுன் சம்பத், குருமூர்த்தி, கார்த்திக் ராவ் உள்ளிட்ட 3 பேர் மீதும் கலகம் செய்யத் தூண்டுதல், மத, இன, மொழி, சாதி, சமயம் தொடர்பான விரோத உணர்வுகளைத் தூண்ட முயற்சி செய்தல், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இத்தனை பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தாலும் பல நெருக்கடிகளால் சிறைக்கு அனுப்ப வேண்டியவரை அவரது காரில் ஏற்றி அனுப்பி வைத்த போது... 20-ந் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனச் சொல்லி அனுப்பினார்கள்.

 

Seshan


 

வெளியே வந்த அர்ஜுன் சம்பத், "காலங்காலமாக திருவள்ளுவரை இப்படித் தான் பார்த்தோம். அதன்படியே நாங்களும் வழிபட்டோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால்தான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார். இந்நிலையில்... பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் சிலை மீதான காவி அடை யாளம் அகற்றப்பட்டு சிலையைச் சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. தி.க. தலைவர் கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழ்நாட்டில் தேசியம், திராவிடம், தமிழ்த் தேசியம் என்று அரசியல் ரீதியாக பிரிந்து நின்றாலும் திருவள்ளுவரை தமிழராக மட்டுமே பார்க்கிறார்கள். அதனால்தான் இதுவரை எந்த அமைப்பும் சொந்தம் கொண்டாடவில்லை. ஆனால் பா.ஜ.க. மதச்சாயம் பூசி இந்துவாக்க நினைக்கிறது.


ஏன் இப்படி பா.ஜ.க. கிளம்பியுள்ளது? என்ற நமது கேள்விக்கு, சாமானிய மக்கள் சொல்லும் பதில்... பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத நிலையில் அந்த இடங்களில் இப்படி "இந்து' என்கிற மதச் சாயத்தை தூண்டிவிட்டு அதன்மூலம் கால்ஊன்ற நினைப்பது வழக்கம். அதாவது கட்சிகள் மாறி இருந்தாலும் பலர் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கவர்ந்து தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்துவிடும் என்பதற்காகத்தான் இப்படிக் கிளப்பி விடுகிறது.

அதுபோலத்தான் இப்ப திருவள்ளுவரை கடவுள் ஆக்கிவிட்டால், அதை தமிழகத்தில் உள்ள திராவிட, தமிழ்த் தேசிய கட்சிகள் எதிர்க்கும். அந்தச் சந்தர்ப்பத்தில் "இந்து கடவுளை எதிர்க்கிறார்கள்' என்று பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் சென்று எதிர்க்கும் கட்சிகளில் உள்ள கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை தங்கள் பக்கம் இழுக்கலாம் என்பதே அவர்களின் நோக்கம்.

ஆனால் தமிழ்நாட்டில் அது எடுபடாது. தாமரையை மலர வைக்க வள்ளுவர் உதவமாட்டார் என்பதை அவர்கள் உணரவில்லை. இதற்கு அ.தி.மு.க. அரசும் துணைபோகிறது. அதனால்தான் அமைச்சர் பாண்டியராஜன், "திருவள்ளுவர் இந்து என அவர்கள் சொல்கிறார்கள். கிறிஸ்தவர்கள் சிலுவை போட்டாலும், இஸ்லாமியர்கள் தொப்பி அணிவித்தாலும் நாங்கள் ஏதும் சொல்வதற்கில்லை'' என்றார்.

பிள்ளையார்பட்டி வள்ளுவர் சிலைக்கு காவி கட்டி, உத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் வகையறாக்கள், சிதம்பரம் நடராஜர் சிற்றம்பலத்தில் திருக்குறளையோ, தேவாரத்தையோ பாட முடியுமா? இதுதான் இவர்கள் சொல்லும் இந்து தர்மமா? எனக் கேட்கிறார்கள் தமிழக பக்தர்கள்.

 

Ayodhya