Skip to main content

37 லட்சத்துல இப்ப 37 ரூபா கூட இல்லீங்க...: விசு மீது புகார் கொடுத்தது ஏன்? விளக்குகிறார் ரமேஷ் கண்ணா!

Published on 25/07/2018 | Edited on 25/07/2018
VISU


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் ரூபாய் 37 லட்சம் மோசடி செய்துள்ளதாக முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் மீது, தற்போதைய சங்க தலைவர் கே.பாக்யராஜ், பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் ரமேஷ்கண்ணா ஆகியோர் புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் பேசிய ரமேஷ் கண்ணா, 
 

கடந்த எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை விசுவே ஏற்றுக்கொண்டார். யாரும் அவரை தலைவராக்கவில்லை. தொடர்ந்து நீடித்தார். இந்த சங்கத்தில் தேர்தலே நடத்தவில்லை. தேர்தல் நடத்தாமல் இருந்தால் நியாயமான சங்கமாக இருக்காது என்று தேர்தல் நடத்த முடிவு செய்தோம். அதற்கான ஏற்பாடுகளை செய்தோம். பொறுப்புக்கு வந்தோம். 
 

நாங்கள் சங்க பொறுப்புக்கு வருகிறோம் என்று தெரிந்தவுடன், விசு ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்தார். பின்னர் எங்கள் சங்கத்தில் இருந்த சந்தா பணம் ரூபாய் 37 லட்சத்தை அந்த அறக்கட்டளைக்கு மாற்றினார். 37 லட்சத்துல இப்ப 37 ரூபாய் கூட இல்லை. இதெல்லாம் அவர் இருக்கும்போது நடந்தது. இதனை கேட்க அப்போது யாரும் இல்லை. 

 

 

 

நாங்கள் பொறுப்புக்கு வந்த பின்னர், இந்த அறக்கட்டளை தனிப்பட்ட முறையில் சொந்தமானது. இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறிவிட்டார். பொதுக்குழுவைக் கூட்டி முடிவு எடுக்காமல் அறக்கட்டளை ஆரம்பிக்கக்கூடாது. ஆனால் அவர் அதனை ஆரம்பித்துவிட்டார். அவரே அதற்கு தலைவராகி, பிறைசூடனையும் சேர்த்துக்கொண்டார். எழுத்தாளர் சங்கத்தில் உள்ள ஆவணங்களையும் இரவோடு இரவாக எடுத்துக்கொண்டு அவரது வீட்டில் வைத்துக்கொண்டார். 

பொறுப்பில் உள்ள அனைவரும் அவரிடம் சென்று, ''அய்யா நீங்க பெரிய மனுஷன், சினிமாவுல உங்களுக்கு ஒரு மரியாதை இருக்கு. நீங்க தலைவராக இருங்க, பிறைசூடன் பொருளாளராக இருக்கட்டும், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்து 3 பேரை சேர்த்து, அதாவது நான், மனோஜ்குமார், பாக்கியராஜ் ஆகிய 3 பேரும் சேர்த்து சங்கத்தை, அறக்கட்டளையை இயக்குவோம். 5 பேர் சேர்ந்து இயக்கினால் நன்றாக இருக்கும்'' என்றோம். இந்த யோசனை அவருக்கு நியாயமாகவும் இருக்கிறது. நிராகரிக்கவும் முடியவில்லை. 

விசு சார் என்ன சொன்னாருன்னா, ''பிறைசூடனை கேளுங்கள்'' என்றார். அவரைப்போய் கேட்டால், ''விசுவை கேளுங்கள்'' என்றார். ''அவரை கேளு, இவரை கேளு'' என்றார்கள். பழைய நிர்வாகிகளை சந்தித்துப் பேசும்போது, ''நாங்கள் விலகிவிட்டோம், சங்கத்திற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை'' என்றார்கள். மதுமிதா என்பவர் திரிசக்தி சுந்தரராமனை உறுப்பினராக ஆக்கியிருக்கிறார். 
 

திரிசக்தி சுந்தரராமனை தொடர்பு கொண்ட பாக்கியராஜ், நிலைமையை விளக்கினார். அதற்கு அவர், ''எனக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. நீங்க எந்த முடிவை வேண்டுமானாலும் எடுங்கள்'' என்றார்.
 

இதற்கிடையில் பிணம் திண்ணும் ஓநாய்கள், கழுகுகள் என வாட்ஸ் அப்புகளில் எங்களை அவதூறாக செய்திகளை பரப்பினார்கள். 
 

நடந்ததையெல்லாம் மறந்து, நாமெல்லாம் ஒன்றாக இணைந்து பணியாற்றலாம் என்று பாக்கியராஜ் விசுவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு, சுந்தரராமனை விட்டு வழக்கு போட்டார். 
 

இதையடுத்து நாங்கள் பொதுக்குழுவை கூட்டினோம். விவாதித்தோம். மறுபடியும் ஒரு கடிதம் கொடுத்தோம். எந்த பிரச்சனையானாலும் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருந்தோம். 
 

 

 

ஆனால் விசு, பிறை சூடனை பாருங்கள் என்றார். பிறைசூடன் விசுவை பாருங்கள் என்றார். வேறு வழியில்லாமல்தான் ரூபாய் 37 லட்சம் மோசடி செய்துள்ளதாக புகார் கொடுத்தோம். இப்பவும் நாங்கள் அவர்களை சேர்த்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். 

இப்பொழுதுள்ள நிர்வாகிகள் எப்பொழுது பதவியேற்றார்கள்? எவ்வளவு ஆண்டுகள் உங்கள் பதவிக்காலம்?
 

கடந்த மார்ச் மாதம் தேர்தல் நடந்தது. அதில் யாரும் எங்களக்கு எதிராக போட்டியிடவில்லை. அன்னப்போஸ்டிங்கில் அனைவரும் பொறுப்புக்கு வந்தோம். பதவி காலம் இரண்டு ஆண்டுகள். 
 

உங்க சங்க உறுப்பினர்களுக்கு என்னென்ன நலத்திட்ட உதவிகள் செய்திருக்கிறீர்கள்?
 

கடந்த வருடம் கூட மருத்துவ உதவி, கல்வி கட்டண உதவி உள்ளிட்ட எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறோம். 
 

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இப்போது உங்கள் சங்கம்... அனைத்திலுமே ஊழல் புகார்கள் எழுகின்றன. இதற்கு காரணம் என்ன?
 

சங்கம் ஆரம்பிக்கும்போது நல்ல எண்ணத்துடன்தான் அனைவரும் ஆரம்பித்தனர். அப்போது நிர்வாகிகளாக இருந்தவர்கள் சுயநலம் பார்க்காமல் பொதுநலத்தை பார்த்தார்கள். சமீபத்தில் சங்கத்தில் கொஞ்சம் நிதி சேர்ந்தவுடன் அதை அனுபவிக்க சிலர் உள்ளே புகுந்துகொண்டனர். 
 

சங்க உறுப்பினராக இருந்தால்தான் சினிமாவில் பணியாற்ற முடியும் என்ற கட்டுப்பாடெல்லாம் இன்னும் இருக்கிறதா?
 

 

 

கண்டிப்பாக இருக்கிறது. உறுப்பினராகி சினிமாவில் பணியாற்றுவதுதான் முறை. அப்போதுதான் உறுப்பினருக்கு ஏதாவது பிரச்சனை இருந்தால் சங்கம் தீர்வு காண முயற்சி எடுக்கும். பிரச்சனையை தீர்த்து வைக்கும் என்றார்.
 

கே.பாக்யராஜ், மனோஜ்குமார், ரமேஷ்கண்ணா ஆகியோரின் குற்றச்சாட்டை மறுத்து பிறைசூடன் தலைமையிலான உறுப்பினர்கள் சென்னை போலீஸ் கமிசனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. 37 லட்சம் பாரத் ஸ்டேட் வங்கியில் உள்ளது. உள்நோக்கத்தோடு புகார் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.