சில நாட்களுக்கு முன்பு பேசிய எடப்பாடி பழனிசாமி முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தற்போதைய திமுக ஆட்சி சொந்தம் கொண்டாடி வருகிறது. எங்கள் ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அவர்கள் ரிப்பன் வெட்டி துவங்கி வைத்து நாங்கள் தொடங்கிய திட்டம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள் என்றார். இந்த விவகாரம் தொடர்பாக திமுக, அதிமுக இடையே மாறி மாறி வாதப்பிரதிவாதங்கள் போய்க் கொண்டிருக்கும் நிலையில் இதுதொடர்பாக திமுக பிரமுகர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் நாங்கள் எண்ணற்ற திட்டங்களைத் தமிழகத்திற்குக் கடந்த 10 வருடங்களில் கொண்டு வந்திருக்கிறோம். அவர்கள் வேண்டுமென்றே மறைக்கப் பார்க்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி திமுக மீது குற்றம் சாட்டுகிறாரே?
இவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார்கள், குறிப்பிட்டு இந்த திட்டங்களை நாங்கள் செய்துள்ளோம் என்று இவர்களால் எதையாவது கூற முடியுமா? அப்படி இவர்கள் செய்திருந்தால் மக்கள் இவர்களை ஏன் துரத்தி அடித்திருக்கப் போகிறார்கள். நாங்கள் கொண்டு வந்த திட்டத்தைத்தான் திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என எடப்பாடி பழனிசாமி கூறுகிறார் என்றால், அவர்கள் தொடங்கிய எந்த திட்டத்தை நாங்கள் செய்கிறோம் என்பதையும் சேர்த்தே அவர் கூற வேண்டியதுதானே. சும்மா அவர் வாயில் வந்ததை எல்லாம் கூறி வருகிறார். கட்சி அவரிடம் இல்லை, செல்வாக்கு இல்லை, அதிமுக எத்தனை பிரிவாக இருக்கிறது என்று அவருக்கே தெரியாது. அப்படி இருக்கையில் இருப்பைக் காட்டிக்கொள்ள அவர் எதையாவது உளறி வருகிறார்.
இவர்கள் என்ன அப்படித் திட்டத்தை அறிவித்தார்கள் என்று சொன்னால் நன்றாக இருக்குமே, சொல்ல வேண்டியதுதானே? நாங்கள் எங்கள் ஆட்சியில் தொடங்கிய திட்டத்தைத்தான் இவர்கள் அவர்கள் ஆட்சியில் தொடங்கி வைத்து வந்தார்கள். அம்மா கிளினிக் என்ற ஒரு மருந்தகத்தை கண்ணமா பேட்டையில் ஆரம்பித்துள்ளார்கள். சுடுகாட்டுக்கு பக்கத்தால யாராவது இப்படி வைப்பாங்களா? அங்கே ஒரு அம்மா மட்டும் பாவமா உக்கார்ந்திருப்பாங்க நாலு மருந்தோட. இவர்கள் மருந்தகத்தை சுடுகாட்டில் அமைத்துள்ளார்கள், அறிவுள்ள யாராவது இப்படிச் செய்வார்களா? சுடுகாட்டில் திட்டத்தைத் துவங்கிய ஒரு ஆட்சி இந்தியாவில் எங்கேயாவது இருக்குமா? இப்படிப்பட்ட ஆட்சியை நடத்திவிட்டு அவர்களை நாங்கள் காப்பி அடிக்கிறோம் என்று கூறுவதெல்லாம் எவ்வளவு அபத்தமாக இருக்கிறது.
நாங்க என்ன செய்யல, சென்னையில் பிரதான இடங்களில் பாலங்களைக் கட்டி போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்தோம். சென்னைக்கு திண்டிவனத்திலிருந்து என்னால் 2 மணி நேரத்தில் வர முடிகிறது, ஆனால் கிண்டியிலிருந்து உள்ளே செல்ல 3 மணி நேரம் ஆகிறது என பாமக ராமதாஸ் அவர்கள் முன்பு ஒருமுறை கூறினார். தற்போது கிண்டியில் கத்திப்பாரா பாலத்தை உலகத்தரத்தில் கட்டி போக்குவரத்து நெரிசல் இல்லாத ஒரு நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். இதைப்போல அவர்களிடம் ஏதாவது திட்டம் இருந்தால் கூறுங்கள். அதைவிட்டு வாய் சவடால் வேலைகளைச் செய்யாதீர்கள். அது எங்களுக்கு வேண்டுமானால் பலனளிக்கும். அதற்குப் பதில் சொல்ல எங்களுக்கு நேரமில்லை. மக்களுக்குச் செய்ய வேண்டிய பணி நிறைய இருக்கிறது.