இந்தியாவில் விடுதலைக்குப் பிறகு கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக கருதப்பட்ட கேரளாவும், மேற்குவங்கமும், தெலங்கானாவும் இப்போது கம்யூனிஸ்ட்டுகளின கையைவிட்டு போகிறதோ என்ற கவலை எழுந்துள்ளது.
பொதுவாகவே உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் நாடுகள் தங்கள் அணுகுமுறைகளில் சீர்திருத்தம் செய்துவரும் நிலையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் மக்களிடம் சென்றடையவில்லை என்பதை அந்தக் கட்சித் தலைவர்களே இன்னும் உணரவில்லை.
கம்யூனிஸ்ட் கட்சியில் பிரகாஷ் காரத் மேற்கொண்ட வறட்டுவாத கோட்பாட்டு அரசியல் அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை இப்போதேனும் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒப்புக்கொள்வார்களா என்பது தெரியவில்லை.
1996ல் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. கம்யூனிஸ்ட்டுகளின் முக்கிய எதிரியாக இருந்த காங்கிரஸ் கட்சியே கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜோதிபாசுவை பிரதமர் பதவிக்கு ஆதரிப்பதாக அறிவித்தது. அந்த வாய்ப்பை, கட்சி டாகுமெண்ட்டைக் காட்டி எதிர்த்தவர் பிரகாஷ் காரத். இந்த வாய்ப்பை மறுக்கக்கூடாது என்று ஜோதிபாசுவும், ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தும் கருத்துத் தெரிவித்த பின்னரும் விவாதப் பொருளாக்கி அரசியல் தலைமைக்குழுவிலிருந்த 11 பேரில் 6 பேரின் ஆதரவோடு பிடிவாதமாக நிராகரித்தவர் காரத்.
ஆனால், ஆட்சி அமைக்க போதுமான ஆதரவு இல்லாத நிலையிலும், 161 இடங்களுடன் தனிப்பெருங்கட்சி என்ற தனது தகுதியை வைத்து அரசு அமைக்கும் வாய்ப்பை பிடிவாதமாக பெற்று பிரதமர் பொறுப்பை ஏற்றார் வாஜ்பாய். 13 நாட்கள் என்றாலும் பாஜக இந்தியாவில் பிரதமர் பொறுப்பை ஏற்கிற அளவுக்கு பெரிய கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்த அதை வாஜ்பாய் பயன்படுத்தினார். 13 நாட்கள் கழித்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பதவியை ராஜினாமா செய்தார் வாஜ்பாய்.
காங்கிரஸ் கட்சி 140 இடங்களைப் பெற்றிருந்தாலும் கூட்டணி அரசாங்கத்தை திறமையாக நடத்துகிறவர் ஜோதிபாசு என்ற வகையில் அவரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்தது காங்கிரஸ். திமுக உள்ளிட்ட எல்லாக் கட்சிகளும் ஒப்புக்கொண்டன. ஆனால், பிரகாஷ் காரத்தின் முட்டுக்கட்டையால் அன்றைக்கு அந்த வாய்ப்பு பறிபோனது.
அதையடுத்து, தேவகவுடாவுக்கு பிரதமர் வாய்ப்பு கிடைத்தது. தேவகவுடாவின் நடவடிக்கை பிடிக்கவில்லை என்று ஐ.கே.குஜ்ராலை மாற்ற காங்கிரஸ் நிர்பந்தித்தது. கூட்டணி அரசு நீடித்தால் தனது வளர்ச்சி பாதிக்கும் என்ற நினைப்பில் மக்கள் மத்தியில் கூட்டணி அரசுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கியது. இந்நிலையில்தான் ஐக்கியமுன்னணி அரசு ராஜினாமா செய்தது. அதைத்தொடர்ந்து வந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 182 இடங்களைப் பெற்றது. காங்கிரஸ் 141 இடங்களையே பெற்றது.
இந்தச் சமயத்தில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடன் வாஜ்பாய் தலைமையில் பாஜக அரசு அமைத்தது. கடந்தமுறை தீண்டத்தகாத கட்சியாக பார்க்கப்பட்ட பாஜகவை இப்போது பல கட்சிகள் ஆதரிக்கும் நிலை உருவானது. ஆனால், திமுக அரசை கவிழ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வாஜ்பாய் அரசு ஏற்க மறுத்ததால் 13 மாதங்களில் ஓரு வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆதரவுடன் கவிழ்த்து அதிமுக. 1999ல் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பாஜக 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இந்தியாவில் முழு பதவிக்காலத்தை நிறைவு செய்த கூட்டணி அரசு என்ற பெயரை பெற்றது.
ஜோதிபாசுக்கு கிடைத்த பிரதமர் வாய்ப்பை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொண்டிருந்தால், அது பாஜகவைப் போல வளர்ச்சி பெற்றிருக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சில மக்கள் நலத்திட்டங்களை அறிவித்திருக்கலாம். அப்படி அறிவிப்பதை காங்கிரஸ் தடுத்திருந்து பதவியை இழக்க நேர்ந்திருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சிக்கே சாதகமாக அமைந்திருக்கும்.
சரி, அந்த வாய்ப்புதான் பறிபோனது. பாஜக அரசை தூக்கியெறிய 2004 ஆம் ஆண்டு சிபிஎம் பொதுச்செயலாளர் புதிய தந்திரத்தை உருவாக்கினார். காங்கிரஸையும் மற்ற மதசார்பற்ற மாநிலக் கட்சிகளையும் அணிதிரட்டி ஒரு கூட்டணியை உருவாக்க முயற்சித்தார். அதற்காக அவர் முதலில் சந்தித்த தலைவர் கலைஞர்தான். சுர்ஜித்திடம் கலைஞர் வைத்த யோசனை ஒன்றுதான்…
“தேசிய அளவில் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் சம்மதம் தெரிவிக்க வேண்டும்”
கலைஞரின் கோரிக்கையை சோனியாவிடம் தெரிவித்தார் சுர்ஜித். உடனே, சோனியாவும் கூட்டணி அரசுக்கு காங்கிரஸ் தயார் என்று அறிவித்தார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று மத்தியில் அரசு அமைந்தது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் கீழ் அந்த அரசு செயல்பட்டது. கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியில் பங்குபெற வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தியது. அப்போதும் பிரகாஷ் காரத் போட்ட முட்டுக்கட்டையால் அந்த வாய்ப்பும் போனது. சபாநாயகர் பொறுப்பையாவது ஏற்க வேண்டும் என்று கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியதால் சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகரானார்.
இந்த ஆட்சிக்காலத்தில் பெட்ரோல் டீசல் விலையோ, சமையல் வாயு விலையோ ஒரு பைசா கூட ஏறவில்லை. இடதுசாரிகளின் வேண்டுகோளை மத்திய அரசு அப்படியே ஏற்றது. குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தில் இடம்பெற்றபடி, 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்ற முனைப்போடு செயல்பட்டு அதை நிறைவேற்றியது மத்திய அரசு. அரசுக்கு ஆதரவு தரும் ஒரு கட்சியின் சொல்லுக்கெல்லாம் கட்டுப்பட்டு நடந்தார் மன்மோகன்சிங். ஆனால், அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடக் கூடாது என்று கம்யூனிஸ்ட்டுகள் பிடிவாதமாக இருந்தனர். அதை மன்மோகன் இல்லாவிட்டால் இன்னொருவர் நிறைவேற்றியே தீருவார் என்று தெரிந்தும், அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். பிரதமர் கொடுத்த எந்த விளக்கத்தையும் ஏற்க தயாராக இல்லை. கடைசியில் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கம்யூனிஸ்ட்டுகள் கொண்டுவந்தனர். அந்த தீர்மானத்தை ஆதரித்து பாஜகவும் வாக்களித்தது. ஆனால், மன்மோகன்சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது.
கம்யூனிஸ்ட்டுகள் காங்கிரஸை பகைத்தது, 2009 மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸுடன், காங்கிரஸ் கட்சி கைகோர்க்கும் நிலையை உருவாக்கியது. இதன்விளைவாக திரிணாமுல் காங்கிரஸ் மேற்குவங்கத்தில் ஆட்சியைக் கைப்பற்றி, இடதுமுன்னணியை வீழ்த்தியது. அப்போதிருந்து, கம்யூனிஸ்ட் கட்சியின் வாக்கு வங்கி மேற்கு வங்கத்தில் சரியத் தொடங்கியது. 2004 தேர்தலில் 50.50 சதவீத வாக்குகளுடன் 35 இடங்களை இடதுமுன்னணி பெற்றது. காங்கிரஸ் கட்சி 14.56 சதவீத வாக்குகளுடன் 6 இடங்களை மட்டுமே பெற்றிருந்தது. திரிணாமுல் காங்கிரஸ் 21 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தை மட்டுமே பெற்றிருந்தது. பாஜக 8 சதவீத வாக்குகளை வைத்திருந்தாலும் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
2009 தேர்தலில் காங்கிரஸும் திரிணாமுல் காங்கிரஸும் கூட்டணி அமைத்து 26 இடங்களை கைப்பற்றின. திரிணாமுல் காங்கிரஸின் வாக்குச்சதவீதம் 31.18 ஆகவும், காங்கிரஸின் வாக்குச்சதவீதம் 13.45 ஆகவும் இருந்தது. இடதுமுன்னணியின் வாக்குச்சதவீதம் 42.60 ஆக குறைந்தது. பாஜக 6.14 சதவீத வாக்குகளுடன் முதல்முறையாக மேற்குவங்கத்தில் 1 தொகுதியுடன் தனது கணக்கைத் தொடங்கியது.
2014 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 34 இடங்களுடன் 39 சதவீத வாக்குகளைப் பெற்றது. இடதுமுன்னணியின் வாக்குச் சதவீதம் 29.71 ஆகி, வெறும் 2 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜகவின் வாக்குச்சதவீதம் 17.02 ஆக உயர்ந்து, 2 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் 9.58 ஆக குறைந்ததுடன் தொகுதிகளும் 4 ஆக சரிந்தது.
2019 மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 43.28 சதவீத வாக்குகளுடன் 22 இடங்களையும், பாஜக 40.25 சதவீத வாக்குகளுடன் 18 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 5.61 சதவீத வாக்குகளுடன் 2 இடங்களையும் பெற்றன. இடதுமுன்னணி 7.43 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தைக்கூட பெறவில்லை.
திரிபுராவில் பாஜகவின் வாக்குச்சதவீதம் 49.03 சதவீதமாக உயர்ந்து 2 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் கட்சி 25.34 சதவீதம் வாக்குகளையும், இடதுமுன்னணி 17.31 சதவீதம் வாக்குகளையும் பெற்று ஜீரோவாகி இருக்கின்றன.
அதாவது நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த இரண்டு மாநிலங்களில் கம்யூனிஸ்ட்டுகள் அல்லது இடதுசாரிகள் தங்களுடைய அடித்தளத்தையே இழந்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தில் கிட்டத்தட்ட 2004 ஆம் ஆண்டு பாஜக இருந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த அளவுக்கான வீழ்ச்சியை இடதுசாரிகள் எப்படி சமாளித்து எழப்போகிறார்கள்?
உலகம் முழுவதும் சித்திரவதைகளால் ஒடுக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், ஜனநாயக அரசியலுக்கு ஏற்ப தங்களுடைய வியூகங்களை மாற்றி, சாமான்ய மக்களுக்கான அரசியலை முன்னெடுத்து, வெகுஜன இயக்கங்களாக மாறி பல நாடுகளில் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றி இருக்கிறார்கள்.