Skip to main content

“என் மீது விழுந்த அடிகளை தாங்கி உயிரை காப்பாற்றியவர் ஆசிரியர்” - பிறந்தநாள் விழாவில் நெகிழ்ந்து போன முதல்வர்

Published on 03/12/2022 | Edited on 05/12/2022


சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 90வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் தனக்கும் ஆசிரியருக்குமான உறவு குறித்து மிக உணர்ச்சிகரமாக உரையாற்றினார். இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, " இன்றைக்கு ஆசிரியர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த அனைத்து கொண்டாட்டங்களுக்கும் அவர் தகுதியான நபர். இந்த தமிழ்ச் சமூகத்துக்கு அவர் ஆற்றிய தொண்டு என்பது ஒரு சில மணி நேரத்தில் கூறி முடிக்கக்கூடியது அல்ல.

 

ரப

 

தமிழகத்தில் நடைபெற்ற பல இக்கட்டான நிகழ்வுகளில் பங்கெடுத்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் இந்த கருப்பு சட்டைக்காரர். குறிப்பாக எமர்ஜென்சி காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் இவரின் பங்களிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து. குறிப்பாக அந்த காலகட்டத்தில் இவர் ஆரம்பத்திலேயே கைது செய்யப்பட்டு சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு நான் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டோம். நாங்கள் சிறையில் அடைக்கப்பட்ட சில நாட்களிலேயே எங்கள் மீது தாக்குதல்கள் நடத்த ஆரம்பித்தார்கள். குறிப்பாக என்னைக் குண்டாந்தடிகள் கொண்டு தாக்கினார்கள். அடிகள் ஒவ்வொன்றும் எப்படி இருக்கும் என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. 

 

அது மிகக் கடுமையான தாக்குதல்களாக இருந்தது. இப்போது இருப்பதைப் போல் கூட அப்போது நான் இருக்கமாட்டேன். மிக ஒல்லியாக மெலிந்த தேகமாகவே இருந்தேன். அவர்களின் தாக்குதலைத் தாங்கும் அளவுக்குக் கூட அப்போது என்னிடம் உடல் பளு இருக்காது. அந்த நேரத்தில் சிறையில் என் மீது விழுந்த அடிகளைத் தாங்கிக்கொண்டவர் ஒருவர் சிட்டிபாபு. மற்றொருவர் நம்முடைய ஆசிரியர். என் மீது விழுந்த அடிகளை தான் வாங்கிக்கொண்டு என் உயிரைக் காப்பாற்றியவர் அவர். தற்போது கூட எங்களின் அரசியல் எதிரிகள் எங்களைத் தாக்கும்போது எங்களுக்கு முன் அதனைத் தடுத்து நிறுத்தி எங்களைக் காக்கும் கேடயமாக இருப்பவர் ஆசிரியர் அவர்கள். இதனை திமுகவைச் சேர்ந்த அனைவரும் அறிவர். அதிலே இருவேறு மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 

 

தினந்தோறும் அவர் விடுகின்ற அறிக்கையினை அடிப்படையாகக் கொண்டு நாங்கள் எடுக்கின்ற முடிவுகளைத் தீர்மானிக்கின்றோம். ஒரு நடமாடும் பல்கலைக்கழகமாகவே அவர் இத்தனை ஆண்டுக்காலம் இருந்து வந்துள்ளார். பத்து வயதில் கூட்டத்திலே பேச ஆரம்பித்த அவர் அண்ணாவால் மேடையிலேயே பாராட்டைப் பெற்றவர். அத்தகைய பேச்சாற்றல் கொண்டவர். அவரை தனித் தனியாகப் புகழ வேண்டும் என்று சொன்னால் இந்த நாள் மட்டும் பத்தாது. பேசிக்கொண்டே போனால் அடுத்த நாளே வந்துவிடும். அந்த அளவுக்குத் தனிச்சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்டவர்.

 

இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட அவரை நாங்கள் வாழ்த்துவது என்பது ஏதோ அவருக்கு நாங்கள் சேர்க்கின்ற புகழோ அல்ல. அவரை வாழ்த்துவதே எங்களுக்கு நாங்கள் தீட்டிக்கொள்கின்ற புகழாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த தமிழ்ச் சமூகத்திற்கு அளவில்லாத உழைப்பைக் கொடுத்துள்ளார். குறிப்பாக பெரியாரின் பேரன்பைப் பெற்றவராக அவர் இறக்கும் வரையில் தொடர்ந்து இருந்து வந்துள்ளார். அவரிடம் தொடர்ந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பது மிகக் கடினமான காரியம். ஆனால் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்து அதையும் அவர் சாதித்துள்ளார். எனவே இவர் இன்று 90வது பிறந்தநாளைக் கொண்டாடுவது மட்டுமல்ல, நூறாவது பிறந்த நாளையும் இவர் கொண்டாட வேண்டும் அதனை இந்த தமிழ்ச் சமூகம் பார்க்க வேண்டும் என்று இந்த நேரத்தில் கூறி மகிழ்கிறேன்" என்றார்.

 

 

Next Story

'மோடி ஒவ்வொரு முறை வரும்போதும் அவரது தவறுகளே நினைவுக்கு வரும்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
'Every time Modi comes, he remembers his mistakes' - Chief Minister M.K.Stalin Kattam

தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் பலரும் பாஜகவின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடியை கிழித்துள்ளது. உண்மையான ஊழல் கட்சி பாஜக தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது. மற்ற கட்சிகளை ஊழல் கட்சி என்று விமர்சித்துள்ள பாஜக தான் உண்மையான ஊழல் கட்சி. அமலாக்கதுறையின் சோதனைகளுக்கு ஆளான சில நாட்களில் ஏராளமான நிறுவனங்கள் தாராளமாக பாஜகவுக்கு நிதி உதவி வழங்கியுள்ளன.

அமலாக்கத்துறை மூலம் மிரட்டி நிறுவனங்களிடமிருந்து பல கோடி பறித்துள்ளதால் பாஜக கட்சிதான் ஊழல் கட்சி என மக்கள் உணர்ந்துள்ளனர். இந்தி திணிப்பின் போது இரட்டை மொழிக் கொள்கையில் உறுதியாக இருந்தது போல் சி.ஏ.ஏ வை அமல்படுத்த மாட்டோம் என்பதில் உறுதியாக இருக்கிறோம். திமுக பற்றி பிரதமர் மோடி தவறான தகவல்களை பேசி வருகிறார். தமிழ்நாட்டுக்குச் செய்த திட்டங்கள் என்னென்ன என்று கேள்வி எழுப்பினால் பாஜகவினர் அதற்கு பதிலளிப்பதில்லை.

வதந்திகளை பரப்பி பாஜகவினர் கவனத்தை திசை திரும்புகின்றனர். ஒன்றிய அரசின் எந்த திட்டம் தமிழ்நாட்டில் முடக்கப்பட்டது என்று கேட்டால் பாஜகவினரிடம் பதில் இல்லை. பிரதமர் வீட்டு வசதி திட்டம், ஜல் ஜீவன் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுவது பாஜகவினர் முதல் பிரதமர் வரை அனைவருக்கும் தெரியும். திமுகவில் வாரிசு அரசியல் என்று கூறி பிரச்சனைகளை பாஜகவினர் திசை திரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வாரிசுகள் இடம் பெற்றுள்ளது பற்றி பிரதமர் பதில் கூறுவாரா? பாஜக ஆட்சியில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கொடுத்ததற்கு பிரதமரின் பதில் என்ன?

தேர்தல் பத்திரம் மூலம் ஊழலையே பாஜக சட்டபூர்வமாக செய்துள்ளது. தேர்தல் பத்திர தில்லுமுல்லுகள் அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளது. தேர்தல் பத்திர ஊழல் பாஜகவின் முகமூடி கிழித்துள்ளது. அமலாக்கத்துறை செயல்பாட்டை அம்பலப்படுத்தி உள்ளதால் திமுக அமைச்சர்கள் மீது அரசியல் நோக்கோடு வழக்கு தொடரப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. களங்கம் கற்பிக்கும் முயற்சிகளை சட்டபூர்வமாக திமுக முறியடிக்கும்.

தமிழ்நாட்டுக்கு பாஜக செய்த சாதனைகள் எதுவும் கூற முடியாததால் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பிரதமர் புகழ்ந்துள்ளார். பாஜகவினர் போதை பொருள் பற்றி பேசும் நிலையில் குஜராத்தில் இருந்து தான் அதிக போதை பொருட்கள் வருகின்றன. மோடி ஆட்சியின் 10 ஆண்டு கால தோல்வியால் நாடு முழுவதும் மக்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் மக்களின் விரக்தி தேர்தலில் எதிரொலிக்கும். மோடி ஒவ்வொரு முறை தமிழ்நாட்டுக்கு வரும்போதும் அவரது தவறுகளே மக்கள் நினைவுக்கு வரும். போதை பொருட்களை தடுக்கக்கோரி பழனிசாமி நடத்திய போராட்டம் அரசியல் நாடகம். அதிமுக ஆட்சியில் டிஜிபி மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மும்பை புறப்பட்ட தமிழக முதல்வர்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
The Chief Minister of Tamil Nadu left for Mumbai

ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நீதி யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16ம் தேதி மணிப்பூரில் துவங்கினார். மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் வழியாக இந்த பயணம் நடைபெற்றது, இந்நிலையில் மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று நிறைவு செய்யப்படுகிறது. இதற்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். அதனைத் தொடர்ந்து பிரம்மாண்ட பொதுக் கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் இந்த யாத்திரை நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சற்று நேரத்திற்கு முன்பு சென்னை விமான நிலையத்திலிருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று நடைபெறவிருக்கும் இந்த யாத்திரை நிறைவு விழா மற்றும் அதனை ஒட்டிய பொதுக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.