விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் கமலஹாசன் ஏன் போட்டியிடவில்லை? வயது முதிர்ந்த காரணத்தால் தான் கட்சி ஆரம்பித்துள்ளதாகவும், அவருக்கு அரசியலில் என்ன தெரியும்? என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தெரிவித்திருந்தார்.
எடப்பாடி பழனிசாமியின் கருத்து தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நம்மிடம் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.
என்ன எதிர் விளைவுகள் வரும் என்று கவலைப்படாமல் கமல்ஹாசன் 92லேயே இந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தவர். அன்றிலிருந்து சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார். இன்று இருக்கும் ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகம், அவருடைய வீடு. அதனை வீடாக வைத்துக்கொண்டு நடிகராகவே இருந்தால் பிரதமர் மோடி வந்தால்கூட பார்த்துவிட்டு போவார். அந்த அளவுக்கு அந்தஸ்து, செல்வாக்கு உள்ளவர் தன்னுடைய வசதிகளை குறைத்துக்கொண்டு, மக்களுக்காகத்தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அதிகாரத்தை கைப்பற்றினால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதால்தான் தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
25 வருடத்திற்கு முன்பு இருந்த கிராம சபையை அதன் பயன்பாடு தெரியாமல் முடக்கி வைத்திருந்தார்கள். அதனை இப்போது கமல்ஹாசன்தான் மீண்டும் வெளியே கொண்டு வந்து, அதனை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு கொண்டு வந்தார். கிராமங்களுக்கு அதிகாரம் போய் சேரவேண்டும் என்று நினைப்பவரை பார்த்து ஊராட்சி தெரியுமா? நகராட்சி தெரியுமா என்று முதலமைச்சர் கேட்கிறார்.
2021 சட்டமன்றத் தேர்தலில் எங்கள் பலத்தை பார்த்து அச்சத்தில் இருப்பதால் முதலமைச்சர் இப்படி பேசியிருக்கலாம். திமுக பலவீனமாக இருப்பதால்தான் இப்போதுவரை அவர்கள் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள். 2021 சட்டமன்றத் தேர்தல் அவ்வளவு சுலபமாக அவர்களுக்கு இருக்காது. 2021ல் எல்லா பிரச்சனைகளையும் முன்வைத்து யார் முதல் அமைச்சர் என்ற கேள்விதான் முதலில் நிற்கும். அப்படி வரிசைக் கட்டி நிற்கும்போது மக்களின் எண்ணங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்து, மூன்று மாதத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக ஓட்டுபோடுகிறார்கள் என்றால் மக்கள் இவர்களைப் பார்த்து மயங்கிப்போய் போடவில்லை. அவர்கள் மனம் மாறுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருந்திருக்கிறது. நாளை நல்லாட்சி வரவேண்டும் என்று நினைத்தால் மீண்டும் மாற்றி ஓட்டுப்போடுவார்கள்.
தேர்தல் அரசியல் என்று வந்துவிட்டாலே எந்த தேர்தல் என்றாலும் சந்திக்க வேண்டும் என்று அதிமுக மட்டுமல்ல மற்ற கட்சிகளும் உங்கள் கட்சியைப் பார்த்து கேட்கிறார்களே?
பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். உள்ளாட்சித் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்கப்போகிறோம். இடைத்தேர்தல் லட்சணம் எப்படி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். ஆளும் கட்சியின் அத்துமீறலும், அதிகார துஷ்பிரயோகமும் நடக்கும் என்றார். பாராளுமன்றத் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்கள். மூன்று மாதத்தில் எப்படி ஓட்டுக்கள் மாறும். எடப்பாடி பழனிசாமி மீது உள்ள அணுதாபத்தில் ஓட்டு போட்டார்களா?
நாங்கள் கட்சியை தொடங்கி எங்கள் கட்டமைப்பு சரியாக அமைவதற்குள் தேர்தல் வந்துவிட்டது. இருப்பினும் நாங்கள் பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். நாங்கள் பயந்திருந்தால் எப்படி நாடாளுமன்ற பொதுத்தேர்தலை சந்தித்திருப்போம். எங்கள் பலம் என்ன என்பது அவர்களைவிட எங்களுக்கு நன்றாகவே தெரியும். அடுத்து உள்ளாட்சித் தேர்தல், அதனைத் தொடர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திப்போம். அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
எங்களை பிரிக்க முடியாது என்று ரஜினியை குறிப்பிட்டு கமல் பேசியிருப்பது அரசியலுக்கும் பொருந்துமா? இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால் என்ன நடக்கும் என்று யூகங்கள் எழுகிறதே?
இந்த யூகம்தான் எடப்பாடி பழனிசாமியை பதட்டமடைய வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் இருவரும் 40 ஆண்டு காலமாக எந்தவித வேறுபாடும் இல்லாமல்தான் பழகினார்கள். அரசியலுக்கு கமல் வந்துவிட்டார். ரஜினி வரப்போகிறார். இருவருக்கும் தெளிவான புரிதல் இருக்கிறது. தெளிவாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி, கட்சி எது என்ற புரிதலோடு இருக்கிறார்கள்.
அரசியலில் எப்போதும் வியூகங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. ரஜினி இன்னும் அரசியலுக்கு வரவில்லை என்பதால் சில விசயங்களுக்கு பதில் அளிக்காமல் இருக்கிறார். அவரது திட்டங்கள் அரசியலுக்கு வரும்போது தெரியலாம். எங்களைப் பொருத்தவரை ஆதரவை கேட்பதாக சொல்லியிருக்கிறார் எங்கள் தலைவர். மக்களுக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும் என்று இருவருக்கும் நன்றாகவே தெரியும்.