இளம்பெண் மாயமான விவகாரத்தில் போலி சாமியார் நித்தியானந்தாவின் திருவண்ணாமலை ஆசிரமம் அதிரடி ரெய்டுக்கு ஆளானது.
கர்நாடகா மாநிலம் பெங்களுரூ ஆர்.ஆர் நகரைச் சேர்ந்தவர் நாகேஷ். பொறியாளரான அவர், போலிச் சாமியார் நித்தியானந்தாவின் முன்னாள் பக்தர். அதனால் அப்போது கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் தன் மனைவி மாலா மற்றும் தம் இரண்டு மகள்களுடன் நித்தியின் பிடதி ஆசிரமத்தில் நடக்கும் சத்சங்க நிகழ்ச்சிக்குச் சிலமுறை சென்றுவந்திருக்கிறார். அந்த வகையில் அங்கு சென்று அவர்கள் திரும்பும்போது, அவர்களின் இளையமகள் மட்டும், ”நான் ஆசிரமத்தை விட்டு இப்போதைக்கு வரமாட்டேன். கொஞ்சநாள் இருந்து இங்கு நடப்பதைப் பார்த்துவிட்டு வருகிறேன்” என்று சொல்லிவிட்டு, அங்கேயே இருந்துகொண்டார்.
இந்த நிலையில், நாகேஷின் இளைமகளிடம் இருந்து சரியான தகவல்கள் வராததால், மகளைப் பார்க்க பிடதி ஆசிரமத்திற்குச் சென்றிருக்கிறார் நாகேஷ். அப்போது ஆசிரம ஆட்கள், "உங்களைச் சந்திக்க மகள் விரும்பவில்லை” என்று கூறி அவரைத் துரத்தினர். மகளைத் தேடி அங்கு போகும் போதெல்லாம் கடும் மிரட்டலுக்கு ஆளான நாகேஷ், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, கர்நாடக போலீஸிடம் புகாரோடு போயிருக்கிறார். அங்கே பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்த நேரத்தில் நாகேஷின் இளைய மகள், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நித்தியானந்தா ஆஸ்ரமத்தில் இருப்பதாக நாகேஷுக்குத் தகவல் கிடைக்க, அவர் திருவண்ணாமலைக்கு குடும்பத்தோடு விரைந்து வந்தார். அங்கும் புகார் கொடுத்தார். அதில், தன் மகளை நித்தித் தரப்பு வெளியே வரமுடியாதபடி அடைத்து வைத்திருப்பதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் குறிப்பிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை தாலுகா இன்ஸ்பெக்டர் ஹேமலதா, எஸ்.ஐ. சுமன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி அங்குள்ள நித்தியின் ஆசிரமத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் ஆசிரமக் கதவைத் தட்டிய போது, லேசில் கதவு திறக்கப்படவில்லை. போலீஸ் டீம் எச்சரித்த பிறகு 30 நிமிடம் கழித்தே கதவைத் திறந்திருக்கிறார்கள். அங்கும் நாகேஷின் இளைய மகள் இல்லை. போலீஸ் டீம் விடாப்பிடியாக உள்ளே சென்று ஆய்வு செய்தபோது ரகசிய பாதாள அறைகள் சில, பூட்டப்பட்ட நிலையில் இருந்தன. "அதற்கான சாவி எங்களிடம் இல்லை' என்று அங்கிருந்த நித்தியின் சிஷ்யைகள் கைவிரித்துவிட்டார்கள்.
இந்த விவகாரம் குறித்து நாம் காவல்துறைத் தரப்பிடம் கேட்டபோது "நித்தி-ரஞ்சிதா வீடியோ வெளியானபோது திருவண்ணாமலை ஆசிரமம் தான் முதலில் பொதுமக்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இருந்தும் இங்குள்ள சில சமூக சேவை அமைப்புகளுக்கு பணத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து, அவர்களின் ஆதரவோடும் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் உதவியோடும் இருந்த நித்தி, எங்கள் காவல் துறை அதிகாரிகளுக்கும் லட்ச லட்சமாய் வாரிக்கொடுக்க, அவர்களும் நித்திக்குத் தலையாட்டும் பொம்மைகளாகி விட்டார்கள். இப்போதும் பணம் தான் நித்திக்குக் கேடயமாக இருக்கிறது. அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதெல்லாம் டிராமா. நித்தியின் பிடியில் போதைக்கு அடிமையாக்கப்பட்ட இளம்பெண்கள் சிலரும் சிக்கி இருக்கிறார்கள். இதுகுறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது. விரைவில் அவர்கள் மீட்கப்படுவார்கள்” என்றது அழுத்தமாக.
"நாகேஷின் இளைய மகள் போல் நித்தி தரப்பால் மறைத்து வைக்கப்பட்ட இளம்பெண்கள், எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் அத்தனை பேரும் பாதுகாப்போடு இருக்கிறார்களா?' என்கிற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் நாகேஷின் குடும்பம், அவரின் மகளைத் தேடிப் பரிதவித்து வருகிறது.