Skip to main content

ஆமை புகுந்த வீடும், அமெரிக்கா நுழைந்த நாடும்!

Published on 31/12/2018 | Edited on 31/12/2018

மனித உரிமைகளை மீட்கிறேன். ஜனநாயகத்தை காப்பாற்றுகிறேன் என்ற பேரில் நீண்ட நாட்கள், நிலையான அரசுகள் அமைத்திருக்கும் அரபு நாடுகள் பலவற்றை அமெரிக்க ராணுவத் தலையீடு நாசப்படுத்தியது. 2011 ஆம் ஆண்டில் மக்கள் எழுச்சி என்ற போர்வையில் அரசு எதிர்ப்பாளர்கள், கார்பரேட் நிறுவன ஊழியர்கள் என்று சில ஆயிரம் பேரை, ஒரே இடத்தில் தொடர்ந்து கூடச்செய்து, அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும் நேட்டோவும் துணை நிற்கும் என்று அமெரிக்கா அறிவித்தது. 2018 ஆம் ஆண்டு சிரியாவை நாசம் செய்து முடித்தபிறகு, இனியும் உலகப் போலீஸ்காரனாக அமெரிக்கா இருக்க முடியாது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

 

ss

 

சட்டி சுட்டதடா, கைவிட்டதடா என்ற பழமொழிக்கு ஏற்ப, அனுபவம் அமெரிக்காவுக்கு பாடம் கற்றுக் கொடுத்திருக்கிறதா அல்லது அமெரிக்காவின் பொருளாதார நிலைமை அதிபர் ட்ரம்ப்பை இந்த முடிவெடுக்கத் தூண்டியதா என்பதை பார்ப்பதற்கு முன் அமெரிக்கா தலையீடு காரணமாக 2011 தொடக்கம் வரை நல்லாயிருந்து நாசமாப்போன 8 நாடுகளை முதலில் பார்த்துவிடலாம்.

 

ஆப்பிரிக்க நாடான துனிஷியாவில் 2010 ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில் அந்த நாட்டின் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தது. துனிஷியாவின் ஜனாதிபதியாக 1987 முதல் 2011 வரை நீடித்த பென் அலிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் தொடங்கியது. உள்நாட்டில் அரசுக்கு எதிரான தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி ஜனாதிபதி பென் அலி தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். அதன்பிறகு, இன்றுவரை அந்த நாட்டில் நிலையான அரசு அமையவில்லை. இஸ்லாமிய அமைப்புகளும், மதசார்பற்ற அமைப்புகளும் கூட்டணி அரசு அமைத்தாலும், வாழ்வாதாரத்தை சீரமைக்கக் கோரி மக்கள் போராட்டம் நிர்வாகத்தை சீர்குலைத்து வருகிறது.

 

அடுத்து துனிஷியாவைத் தொடர்ந்து அமெரிக்காவின் கலகச் சதிக்கு இரையானது எகிப்து. அந்த நாட்டில் 1980 முதல் 2011 வரை ஆட்சியில் நீடித்த ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக, அரசு எதிர்ப்புக் குழுக்களை கொம்பு சீவிவிட்டது. இதன்விளைவாக 2011 ஜனவரி 25 ஆம் தேதி தலைநகர் கெய்ரோவிலும் மக்கள் எழுச்சி என்ற பேரில் பல ஆயிரம் பேர் நகரின் மத்தியில் உள்ள டாஹிரிர் மைதானத்தில் கூடினார்கள். அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதன் விளைவாக முபாரக் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அவர் மீதும் அவருடைய மகன்கள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், இப்போதம் எகிப்தில் ராணுவத்தின் பொறுப்பில் முபாரக் ஆதரவாளர்களே ஆட்சியில் இருக்கிறார்கள். 2017 ஆம் ஆண்டு முபாரக் விடுதலை செய்யப்பட்டார்.

 

எகிப்தைத் தொடர்ந்து லிபியாவில் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி ஜனாதிபதி முகமது கடாபிக்கு எதிரான தீவிரவாதக் குழுக்கள் கிளர்ச்சியை தொடங்கின. கார்பரேட் ஊழியர்கள் மற்றும் அரசு எதிர்ப்பு குழுக்களைச் சேர்ந்தவர்கள் நகரின் மத்தியில் கூடி தொடர்போராட்டத்தில் ஈடுபட்டனர். 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ராணுவத்துக்கு எதிராக கடாபி எதிர்ப்பாளர்களுக்கு நேட்டோ ராணுவம் உதவிக்கு வந்தது. அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று நடத்த சண்டை 2011 அக்டோபர் மாதம் வரை நீடித்தது. அக்டோபர் 20 ஆம் தேதி கடாபியை தீவிரவாதக் குழுக்கள் கொன்றன. ஆனால், அவர்களுடைய வெற்றி கொஞ்ச நாட்கள்கூட நீடிக்கவில்லை. இப்போது லிபியாவை பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் கூறுப்போட்டு அவரவர் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. லிபியா மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட செய்து கொடுக்க முடியாத அரசு அங்கு இருக்கிறது. இன்று கலவரம் ஓயவில்லை. கல்வி, வீடு, வேலை, மின்சாரம் என்று அனைத்தையும் இலவசமாகக் கொடுத்து, நாட்டின் வருமானத்தை மக்களுக்கு பிரித்துக் கொடுத்த கடாபியைக் கொன்று அந்த நாட்டையே நாசப்படுத்தியிருக்கிறது அமெரிக்கா.

 

இந்த மூன்று நாடுகளிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ஏமன் நாட்டிலும் அந்த நாட்டின் ஜனாதிபதி அலி அப்துல்லா சலேஹ் அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் வெடித்தன. ஆனால், அரசு எதிர்ப்பாளர்களுக்கு போட்டியாக அரசு ஆதரவாளர்களும் தெருக்களில் இறங்கினார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் பலியாகினர். நாடு முழுவதும் இரண்டு அரசியல் குழுவாக உருவானது. இதனிடையே அல் கொய்தா அமைப்பும் நாட்டின் தென் பகுதியைக் கைப்பற்றியது. நல்லாயிருந்த ஏமன் நாசமாவதற்குள் சரிசெய்யும் முயற்சியில் சவூதி அரேபியா ஈடுபட்டது. 2011 நவம்பர் மாதம் ஜனாதிபதி சலேஹ் ஆட்சி மாற்றத்துக்கு சம்மதம் தெரிவித்து, துணை ஜனாதிபதி அப்தெல் அல் ராப் மன்சூர் அல் ஹாதியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனால், இதுவரை அங்கு ஜனநாயக அரசு அமையவில்லை. அல்கொய்தா தாக்குதல், பிரிவினைவாத மோதல்கள், பழங்குடியினர் பிரச்சனைகள் என்று ஏமன் பொருளாதாரம் சீர்குலைந்து கிடக்கிறது.

 

வளைகுடா நாடான பஹ்ரைனில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஃபாத் கவ்ஸ்வே தலைமையில் மன்னராட்சி நடக்கிறது. இந்த தீவில் பெரும்பான்மையோர் ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள். தங்களுக்கு அரசு நிர்வாகத்தில் கூடுதல் உரிமை தேவை என்று கோரி வந்தனர். எகிப்தில் முபாரக் ஆட்சி கவிழ்ந்த தைரியத்தில், அமெரிக்கா உதவும் என்ற எதிர்பார்ப்பில் அரசு எதிர்ப்பு கிளர்ச்சியை தொடங்கினார்கள். ஆனால், சவூதி உள்ளிட்ட அரபு நாடுகள் பஹ்ரைன் மன்னருக்கு உதவியாக வந்தன. அமெரிக்கா உடனே நடுநிலை வேடம் போட்டுக்கொண்டது. அதேசமயம் அரசியல் தீர்வு எட்டப்படாத நிலையில் அங்கு தொடர்ந்து போராட்டங்களும் பாதுகாப்பு படையினருடன் மோதலும் தொடர்கிறது. இந்த மோதலில் அங்கு அமெரிக்கா தொடர்ந்து குளிர்காய்கிறது.

 

tunisia

 

துனிஷியாவின் பென் அலி, எகிப்தின் முபாரக் ஆகியோர் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஈரானுடன் கூட்டணியில் உள்ள சிரியா மீது அமெரிக்காவின் பார்வை விழுந்தது. சிரியாவில் பல்வேறு மதப்பிரிவினர் வாழ்கிறார்கள். அங்கு பஷர் அல் ஆஸாத் 2000மாவது ஆண்டு முதல் ஜனாதிபதியாக இருக்கிறார். அதற்கு முன் 1971 முதல் 2000மாவது ஆண்டுவரை அவருடைய தந்தை ஹஃபிஸ் அல் ஆஸாத் ஜனாதிபதியாக இருந்தார். சிரியாவில் மிகக் குறைவான எண்ணிக்கையுள்ள அல்வைட் என்ற மதப்பிரிவைச் சேர்ந்த ஆஸாத் குடும்பத்தினருக்கு எதிராக பல்வேறு முதக்குழுக்களில் எதிரிகள் இருந்தனர். அவர்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்துவந்தன. 2011 மார்ச் மாதம் அரசு எதிர்ப்பு குழுக்கள் கிளர்ச்சியைத் தொடங்கின. முக்கியமான நகர்ப்புறங்களில் பரவிய கிளர்ச்சியை சிரியா ராணுவம் அடக்க முயன்றது. இந்நிலையில் அமெரிக்காவின் ஆயுத உதவிகளைப்பெற்ற குழுக்கள் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்காவின் நேரடி தலையீடைத் தொடர்ந்து சிரியாவின் ஆதரவாளரான ரஷ்யாவும் களத்தில் இறங்கியது. சிரியாவின் முக்கிய நகரங்கள் நாசமடைந்தன. சண்டை தொடரும் நிலையில் அமெரிக்கா ராணுவத்தை திரும்பப் பெற முடிவெடுத்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார். அது அமெரிக்காவில் பெரிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறது.

 

துனிஷியா, லிபியாவைத் தொடர்ந்து ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் மன்னர் நான்காம் முகமது தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஜனநாயக ஆட்சியை உருவாக்க எதிர்க்குழுக்களுக்கு ஆதரவளித்தது அமெரிக்கா. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து தனது அதிகாரங்கள் சிலவற்றை விட்டுக்கொடுக்கவும், புதிய நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கவும் மன்னர் சம்மதித்தார். அத்துடன் வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு உதவும் வகையில் ஏராளமான நிதியை ஒதுக்கினார் மன்னர். இதையடுத்து இன்றுவரை அரசு எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்ட முடியவில்லை.

 

 

எகிப்தில் போராட்டம் தொடங்கிய அதேசமயத்தில் அரபு நாடுகளில் ஒன்றால் ஜோர்டானிலும் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுக்கு எதிராக இஸ்லாமிய மற்றும் இடதுசாரி தீவிரவாதக் குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஊழல், வாழ்க்கை நிலை ஆகியவற்றை சீரமைக்கக் கோரி இந்தப் போராட்டம் என்றார்கள். போராட்டக்காரர்கள் மன்னரை மாற்றக் கோரவில்லை. சீர்திருத்தங்கள் மட்டுமே எதிர்பார்த்தார்கள். மன்னரும் சில சீர்திருத்தங்களை அமல்படுத்தினாலும், பொருளாதார நிலை இன்னும் சீராகவில்லை.

 

இப்படியாக உலகநாடுகளின் நிம்மதியைக் குலைப்பதே அமெரிக்காவின் வேலையாக இருந்தது. உலகில் சண்டைகள் ஓயக்கூடாது. யுத்தப் பதற்றம் குறையக்கூடாது என்பதே அமெரிக்காவின் ஒரே விருப்பம். ஆயுத வியாபாரம்தான் அமெரிக்காவின் மிகப்பெரிய வருவாய் என்பதால் உள்நாட்டுக் குழப்பங்களும், அண்டைநாடுகளுடன் சண்டையும் அவசியம் என்பதே அமெரிக்காவின் லட்சியம்.

 

kim

 

ஆனால், அமெரிக்காவின் பொருளாதார நிலை சமீப ஆண்டுகளில் படுமோசமாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் உலகின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்கா அமைத்துள்ள ராணுவ தளங்கள்தான் என்று கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 150க்கு மேற்பட்ட இடங்களில் அது தனது ராணுவம் மற்றும் கடற்படை தளங்களை அமைத்துள்ளது. சோவியத் ரஷ்யா, சீனா ஆகிய வல்லரசுகளுக்கு எதிராக உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் இந்தத் தளங்கள் அமைக்கப்பட்டன. இப்போது சோவியத் ரஷ்யா இல்லாத நிலையில் உலக நாடுகளுக்கு பாதுகாப்பு கொடுக்கிறேன் என்று அமெரிக்க வருவாயில் பெரும்பகுதியை செலவிடுவதை ட்ரம்ப் விரும்பவில்லை.

 

கொரியா தீபகற்பத்தில், தென் கொரியாவுக்காக 1946 முதல் அமெரிக்கா ராணுவத்தை நிறுத்தியுள்ளது. அதற்கு ஆகும் செலவைத் தவிர்ப்பதற்காகவே, வடகொரியாவுடன் பேச்சு நடத்த ட்ரம்ப் ஒப்புக்கொண்டார். வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன்னுடன் உடன்படிக்கை ஏற்பட்டவுடன், “இனி அமெரிக்கர்கள் நிம்மதியாக தூங்கலாம்” என்று பகிரங்கமாகவே கூறினார் ட்ரம்ப்.

drump

 

அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தை குறைக்க முடிவெடுத்த அவர், சமீபத்தில் சிரியாவிலிருந்து அமெரிக்க ராணுவத்தை திரும்பப்பெற முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். இதையடுத்து அமெரிக்க ராணுவ அமைச்சர் பதவி விலகுவதாக கூறினார். அதைப்பற்றி ட்ரம்ப் கவலைப்படவில்லை.

 

உலகின் போலீஸ்காரனாக இனியும் அமெரிக்கா நீடிக்க முடியாது என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. அமெரிக்கா பொத்திக்கிட்டு சும்மா இருந்தால் உலகமே அமைதியாக இருக்கும். அவனவன் பிரச்சனையை அவனவனே பார்த்துக்குவான் என்பதே நிஜம்.

சார்ந்த செய்திகள்